தமிழ்நாட்டிற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் தகுந்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (அக்டோபர் 14) அதிகாலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி அடுத்த இரண்டு நாட்களில் நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வரும் 17ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு சார்பில் தலைமை செயலாளர் முருகானந்தம் அவசர கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்து துறை செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பர்களுக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்படுள்ளது.
அதன்படி, தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் விழுந்து சாலைகள் அடைப்பு, போக்குவரத்து தடை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்களில் அதிகரிப்பு, மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளவற்றை கூடுதல் கவனத்துடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆஸ்திரேலியாவுடன் போராடி தோல்வி… பாகிஸ்தான் வெற்றிக்காக காத்திருக்கும் இந்திய மகளிர் அணி!