தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்டோபர் 17) அதிகாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 15ஆம் தேதி வங்கக்கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் நேற்று தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகர்ந்த நிலையில், சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை குறைந்து நேற்று காலை முதல் லேசான மழைப் பொழிவும், மேகமூட்டமும் மட்டுமே இருந்தது.
அதனைத்தொடர்ந்து விடுக்கப்பட்ட ‘ரெட் அலெர்ட்’ கூட நேற்று இரவு சென்னை வானிலை மையம் வாபஸ் பெற்றது. மேலும் இன்று அதிகாலை தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என தெரிவித்தது.
கரையைக் கடந்தது!
இந்த நிலையில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்துள்ளது.
இதனை உறுதி செய்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ளது.
வெப்பச்சலன மழை பெய்யக்கூடும்!
இதுதொடர்பாக தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று காலை வெளியிட்டுள்ள பதிவில், ”சென்னையில் நேற்று மதியம் ஒரு துளி கூட மழை பெய்யவில்லை. மேகங்கள் இல்லாத காற்றழுத்த தாழ்வு பகுதி நெல்லூருக்கு அருகில் உள்ள நிலப்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை கடந்து செல்வதை அங்குள்ள யாருக்கும் தெரியாது, ஏனென்றால் அது கடக்கும் நேரத்தில் வெயிலாக இருக்கும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட KTCC பகுதியில் இன்று சூரியனை பார்க்கலாம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்நாட்டில் நகர்ந்துள்ளதால், மேற்குப் பக்கத்திலிருந்து (நிலம்) தற்காலிக காற்று வீசும்.
எனவே இன்று மாலை முதல் நாளை காலை வரை வெப்பச்சலன மழை பெய்யக்கூடும். மேகங்கள் தரைப் பக்கத்திலிருந்து வங்கக்கடல் நோக்கி நகரும்.
சென்னை, பாண்டி, விழுப்புரம், கடலூர், காரைக்கால், நாகையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆங்காங்கே சாதாரண மழை பெய்யும்” என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மாணவர்களின் ஊக்கத் தொகை: பெற்றோர் விழிப்புடன் இருக்க அரசு எச்சரிக்கை!