சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ள நிலையில், அதற்கு மேகவெடிப்பு காரணமில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
சீர்காழியில் மட்டும் இப்படி மழை கொட்டித் தீர்த்ததற்கான காரணம் என்ன என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
“அதிகபட்சமாக சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழையாகும். டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
சீர்காழியில் அளவுக்கு அதிகமான மழை கொட்டித் தீர்த்ததற்கு மேக வெடிப்பு காரணமில்லை.
மேக வெடிப்பு என்பது மழை இல்லாத காலக்கட்டத்தில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மட்டும் அதிக மழை பொழிவதுதான்.
சீர்காழியில் பெய்தது காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்பட்டதுதான். நேற்று மாலையில் இருந்தே சீர்காழியில் மேகக்கூட்டங்கள் திரண்டிருந்த காரணத்தால் மழை பெய்திருக்கிறது” என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
தீவாக மாறிய சந்தோஷ் நாராயணன் வீடு!
அனைத்துக்கட்சிக் கூட்டம்: நிறைவேறிய தீர்மானம் என்ன?