ரூ.1916.41 கோடியிலான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 17) தொடங்கி வைத்தார்.
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
காலிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழே பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் இத்திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு இந்த மூன்று மாவட்ட விவசாயிகள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த திட்டத்துக்காக கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குட யாத்திரை, பாத யாத்திரை, உண்ணாவிரத போராட்டம், தேர்தலின் போது பொது வேட்பாளரை நிறுத்துவது என பலக்கட்ட போராட்டங்களுக்கு பின்னர் விவசாயிகள் இந்த திட்டத்தை பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் ஓராண்டுக்கும் முன்பே முடிக்கப்பட்டது. எனினும் காலிங்கராயன் அணைக்கட்டில் உபரி நீர் இல்லாததால் அத்திக்கடவு அவிநாசி திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது.
தற்போது உபரி நீர் வெளியேறுவதால் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 17) காலை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 31 ஏரிகள், 1,045 குளம், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்படும்.
இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும். குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். 24,468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ரூ.1,916.41 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 1,046 கிலோ மீட்டர் நீளத்துக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் மூன்று மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
எங்களை காப்பாற்றுவது யார்?: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை புறக்கணிப்பு!
ஆவணி மாத நட்சத்திர பலன்: திருவாதிரை (17.8.2024 முதல் 16.9.2024 வரை)