திருப்பூரில் கெட்டுப்போன உணவை உண்டு 3 குழந்தைகள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் தூத்துக்குடி காப்பகத்தில் 3 வயது சிறுவன் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற பெயரில் தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது.
இந்த காப்பகத்தில் கடந்த 6 ஆம் தேதி கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் 14 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில் 5 விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

விவேகானந்தா சேவாலயத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சமூக நலத்துறை இயக்குநர் வளர்மதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மெத்தனப் போக்குடனும், அஜாக்கிரதையாகவும் செயல்பட்ட விவேகானந்தா காப்பகத்தை மூட உத்தரவிடப்பட்டது. காப்பகத்தில் இருந்த சிறுவர்கள் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தூத்துக்குடியில் காப்பகத்தில் இருந்த 3 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லூர்தம்மாள்புரம் பகுதியில் மனநலம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் தங்கி இருந்த ஜோசப் என்ற மூன்று வயது சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான்.
தந்தையை இழந்த ஜோசப்பின் தாய் வேறு திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டதால் தாத்தாவின் பராமரிப்பில் இருந்துள்ளான்.
வயதான காலத்தில் ஜோசப்பை பராமரிக்க முடியாததால் அவரது தாத்தா காப்பகத்தில் சேர்த்துள்ளார். ஜோசப்புக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று(அக்டோபர் 7) மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜோசப்பை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஜோசன் இன்று (அக்டோபர் 8) உயிரிழந்தான்.
இதுகுறித்து காப்பக நிர்வாகி மேரி தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலை.ரா
ராஜ ராஜ சோழன் யார்? பெரிய பழுவேட்டரையர் பஞ்ச்!
பிள்ளைகளுக்கு எழுதிவைத்த சொத்துக்களை திரும்பப் பெறலாமா? உயர் நீதிமன்றம் தீர்ப்பு!