சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியுள்ளது. இதில், சிறப்புப் பிரிவில் 11 இடங்களும், 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 97 இடங்களும் நிரம்பின. பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (அக்டோபர் 22) தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் இந்திய மருத்துவம் – ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன.
இந்த ஐந்து அரசுக் கல்லூரிகளில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, 30 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,980 இடங்களில் 15 சதவிகிதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் மாநில அரசுக்கு 65 சதவிகிதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 35 சதவிகிதம் உள்ளன.
அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவிகித இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.
சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதா (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஓமியோபதி (பிஎச்எம்எஸ்) ஆகிய பட்டப்படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நேற்று (அக்டோபர் 21) காலை தொடங்கியது. முதல் நாளான நேற்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கும் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 97 இடங்களும் நிரப்பப்பட்டன.
அதேபோல், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட தலா ஐந்து இடங்களும் நிரம்பின. மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 17 இடங்களில் ஓர் இடம் மட்டும் நிரப்பப்பட்டதால், மீதமுள்ள 16 இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளன. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 22-ம் தேதி (இன்று) முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ரஷ்யா செல்லும் மோடி முதல் நாமக்கல் செல்லும் ஸ்டாலின் வரை!
கிச்சன் கீர்த்தனா : பூண்டு காரச்சேவு
தீபாவளி கொண்டாட்டம் : 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ரயில் விபத்து : நாச வேலையே காரணம்… வழக்கில் மேலும் ஒரு சட்டப்பிரிவு சேர்ப்பு!
ஹெல்த் டிப்ஸ்: அனைவருக்கும் ஏற்ற தினசரி ஆரோக்கியக் குறிப்புகள்!
பியூட்டி டிப்ஸ்: குளிக்கும்போது தலைமுடி உதிர்கிறதா? தவிர்ப்பது எப்படி?