தூத்துக்குடியில் லாரியில் கடத்தி வரப்பட்டு மீன்பிடி படகுகளுக்கு வழங்க இருந்த 9,000 லிட்டர் கலப்பட டீசலை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தனிப்படை போலீஸார் நேற்று (ஜூலை 4) வழக்கமான கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகே சந்தேகப்படும்படியாக ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியில் 200 லிட்டர் பேரல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
தனிப்படை போலீஸார் அந்த லாரியை சோதனை செய்தபோது, அந்த பேரல்களில் டீசல் போன்ற எண்ணெய் இருந்தது தெரியவந்தது.
இதனால் போலீஸார் அதை தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் துரை தலைமையிலான போலீஸார் மினி லாரியில் இருந்த 60 பேரல்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் சுமார் 9,000 லிட்டர் டீசல் போன்ற திரவம் இருந்தது. இதை பறிமுதல் செய்த போலீஸார், பேரல்களில் இருந்த டீசல் போன்ற திரவத்தின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.
முதல்கட்ட பரிசோதனையில், அந்த பேரல்களில் இருந்தது கலப்பட டீசல் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதனால் கலப்பட டீசலை கடத்தி வந்ததாக ஒட்டன்சத்திரம் காவேரி அம்மாபட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் பிரதீப்ராஜ் (30),
ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி பெரியராசு மகன் கிட்டப்பன் (37) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மினி லாரி மற்றும் கலப்பட டீசலை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மதுரையில் இருந்து மினி லாரியில் சட்டவிரோதமாக கலப்பட டீசலை தூத்துக்குடிக்கு கடத்தி வந்துள்ளதும்,
இந்த கலப்பட டீசலை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி படகுகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: நீங்களே தயாரிக்கலாம் நேச்சுரல் கலரிங் ஹேர் டை!
டாப் 10 நியூஸ் : ராகுலின் ஹத்ராஸ் பயணம் முதல் ‘கூலி’ ஷூட்டிங் ஆரம்பம் வரை!
கிச்சன் கீர்த்தனா : மட்டன் தோசை
டிஜிட்டல் திண்ணை: கலைஞர் கனவு இல்லம்… அதிகாரிகள் ஆட்டம்… கசப்பில் திமுகவினர்!