அரியலூரில் இன்று (அக்டோபர் 9) நாட்டு பட்டாசுக் கடை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அவ்வப்போது பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் வெடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டம், கிழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் நாட்டுப் பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் இன்று காலை திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறிய சத்தம் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். விபத்து நடந்த உடன் ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில் தற்போது படுகாயமடைந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தகவல் அறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெடி விபத்தில் ஆலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9 இருசக்கர வாகனங்கள், 1 டெம்போ வேன் ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக அரியலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
இஸ்ரேல் போர்: ஹமாஸுக்கு எதிரான தீர்மானத்தை தடுத்த ரஷ்யா- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்தது என்ன?
சபாநாயகருடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு!
5 மாநில தேர்தல்கள் எப்போது? – வெளியான அறிவிப்பு!