போதை மருந்து புழக்கத்தைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதிய நிலையில்…. இன்று (ஆகஸ்டு 6) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மர்ம நபரிடம் இருந்து 9 கிலோ கஞ்சா காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மர்மநபர் பிடிப்பட்டது எப்படி?
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு 9 கிலோ கஞ்சாவுடன் வந்த நபர், கஞ்சாவை வாங்குவதற்கு தயாராக இருந்த நபருக்கு போன் செய்து கொண்டிருந்தார். அவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்ததால் அங்கிருக்கும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரிடம் விசாரித்தபோது, அந்த நபர் தப்பி செல்ல முயன்றுள்ளார்.
எனவே, செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அவரை துரத்தி சென்று பிடித்து மருத்துவமனை டீன் டாக்டர், கனகசபையிடம் ஒப்படைத்தனர். டீன் அந்த நபர் கொண்டு வந்த பையை சோதித்துப் பார்த்ததில், 9 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த நபரை மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில், போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணை
போலீசார் விசாரணையில் அந்த நபர் ஆந்திராவை சேர்ந்த கண்ணமா நாயுடு என்று தெரியவந்தது. மேலும், மருத்துவமனையில் போலீசாரின் சோதனைகள் அதிகளவு இருக்காது, கஞ்சாவை எளிதில் விற்க இயலும் என்று நண்பர் ஒருவர் கொடுத்த அறிவுரையின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, போலீசார் அவரிடம் இருந்த போனை கைப்பற்றி, அதில் போன் செய்யப்பட்டிருக்கும் எண்களுக்கு போன் செய்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சாவை ஒழிப்பதற்கு தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனையிலேயே… கஞ்சா நெட்வொர்க் ஊடுருவியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
மோனிஷா
செப்டம்பருக்குள் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சு.