தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் ஐயப்ப பக்தர்களின் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களும் சபரிமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள மக்கள் குமுளி மலைச்சாலை வழியாக சபரிமலைக்கு பயணம் செய்து வருகின்றனர்.
இன்று (டிசம்பர் 24) நள்ளிரவு சபரிமலையில் இருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிய பக்தர்களின் கார் ஒன்று குமுளி மலைச்ச்சாலையில் இரைச்சல் பாலம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து வந்த தமிழக மற்றும் கேரள போலீசார், தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், காரில் பயணித்த 10 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற இரண்டு நபர்களும் தேனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சபரிமலை கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பியவர்கள் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
ஐபிஎல் ஏலம்: போனை சுவிட்ச் ஆஃப் செய்த சாம் கர்ரன்
“பொங்கலுக்கு பொருட்கள் கொடுத்தால் குறை சொல்கிறார்கள்” – எ.வ.வேலு