வேங்கைவயல் டி.என்.ஏ பரிசோதனை: 11 பேரில் 8 பேர் ஆப்செண்ட்!

தமிழகம்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 பேருக்கான டிஎன்ஏ பரிசோதனை இன்று (ஏப்ரல் 25) தொடங்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை அடுத்து கடந்த 4 மாதங்களாக 144 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் சந்தேகத்திற்குரிய 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு அளித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வேங்கைவயலைச் சேர்ந்த 9 பேர், கீழமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், மற்றும் காவிரி நகரைச் சேர்ந்த ஒருவர் என 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சோதனையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீரில் ஒரு பெண் மற்றும் இரு ஆண்களின் மனித கழிவு கலந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது. மேலும் குடிநீர் தொட்டியில் இருந்த கழிவும், குழாயில் வந்த கழிவும் வெவ்வேறானவை என்று ஆய்வில் கூறப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 பேருக்கான டிஎன்ஏ பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது.

எனினும் ரத்த மாதிரி வழங்க ஆயுதப்படை காவலர் உட்பட 3 பேர் மட்டுமே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

மீதமுள்ள 8 பேர் இன்னும் வராத நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக்குழு 3 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கிறது.

விரைவில் வராத 8 பேரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 11 மாதிரிகள் தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்ட மூன்று மாதிரிகளுடன் ஒத்துப்போனால் இந்த வழக்கு முடிவுக்கு வரும். இல்லையெனில் கூடுதல் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க இன்னும் தாமதமாக நேரிடும்.

கிறிஸ்டோபர் ஜெமா

போராடும் மல்யுத்த வீராங்கனைகள்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் மீண்டும் ரஹானே

+1
0
+1
1
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0