சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் ப்ளக் பாயிண்டில் சொருகப்பட்டிருந்த சார்ஜரின் வயரை கடித்த 8 மாதக் குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள சித்தராடா கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவர் மின்சாரம் வழங்கும் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு சஞ்சனா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இதில் மூன்றாவதாக கடந்த டிசம்பர் மாதம் பிறந்த பெண் குழந்தைக்கு சானித்யா என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று வழக்கம்போல சந்தோஷ் கல்குட்கர் தனது செல்போனை சார்ஜரில் போட்டுள்ளார். அது சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்த விட்டு, சார்ஜர் சொருகியிருந்த பிளக் சுவிட்சை அணைக்காமல் விட்டுவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டார்.
இதற்கிடையே கீழே தொங்கிக் கொண்டிருந்த சார்ஜரின் வயரை பிடித்து 8 மாத குழந்தை சானித்யா விளையாடி கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அந்த வயரை தனது வாயில் வைத்து கடித்ததால், எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் சஞ்சனா, மூச்சு பேச்சின்றி கிடந்த குழந்தையைக் தூக்கி கொண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு, குழந்தையின் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கார்வார் புறநகர் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெற்றோரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருப்பதாக தெரிவித்துள்ள போலீசார், சார்ஜ் ஆனதும் மின் இணைப்பை ஆஃப் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
நம்மில் பலரும், வீடுகளில் பிளக்கிங் செய்யப்பட்ட சார்ஜர் வயர்களை ஆஃப் செய்யாமல் தொங்கவிட்டபடி அலட்சியமாக இருக்கும் நிலையில், தற்போது நிகழந்துள்ள இந்த பிஞ்சுக் குழந்தையின் பரிதாப மரணம் ஒரு பெரிய பாடமாக அமைந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஒரு மாநிலம் என்றுமே யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதில்லை: கபில் சிபல் வாதம்!
ஆசிய ஹாக்கி போட்டி: வெற்றி முனைப்பில் இந்திய அணி!