கரூரில் சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திமுகவைச் சேர்ந்த 8 பேர் இன்று (மே 28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர்.
கரூர் ராமருஷ்ணபுரத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்த சென்றனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், அங்கு வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பாதுகாப்புக்காக கரூர் நகர காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த ஐ.டி. அதிகாரிகள் புகார் கொடுத்தனர். அதன்படி தாக்குதல் நடத்திய திமுகவினர் 50 பேர் மீது சட்டவிரோதமாக கூடியது, அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் அடைப்படையில் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த 8 பேரை கரூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
மக்களவையில் செங்கோலை நிறுவினார் பிரதமர்
மருத்துவமனையின் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் – உக்ரைனில் மீண்டும் பதற்றம்!