78வது சுதந்திர தினம் : மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்… நூற்றாண்டு கடந்த அரசு பள்ளியின் அதிர்ச்சியூட்டும் அவலநிலை!

Published On:

| By christopher

இந்தியா 78 வது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் 104 ஆண்டுகளை கடந்து நிற்கும் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் மரத்தடியில் படித்து வரும் அவல நிலை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா பேரூரில் அமைந்துள்ளது அரசு ஆதிதிராவிட நல உயர் நிலைப் பள்ளி.

இந்தப் பள்ளியில் 1 ஆம் வகுப்பிலிருந்து 5 ஆம் வகுப்பு வரையில் 65 மாணவ மாணவிகளும், 6 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரையில் 67 மாணவ மாணவிகளும் என மொத்தம் 132 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த எட்டு ஆசிரியர் ஆசிரியைகள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால் 132 மாணவர்களுக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. அதுவும் கதவுகள் உடைந்து, செடிகொடிகள் அடைந்து போய் பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.

மேலும் குடிக்க குடிநீர் வசதி இல்லை….  அதைவிட கொடுமையாக மேற்கூரை உடைந்த வகுப்பறையால் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த மூன்று ஆண்டுகாலமாக மரத்தடியில் வகுப்பு நடத்தி வருகின்றனர் ஆசிரியர்கள்.

இதைப்பற்றி பேரூர் பகுதியைச் சேர்ந்த கிரிஹரன் கூறுகையில், “இந்தப் பள்ளி சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1920 இல் உருவாக்கப்பட்டு 104 வருடங்கள் கடந்துவிட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு காலப்போக்கில் ஆதிதிராவிட நல பள்ளியாக தமிழக அரசு மாற்றிவிட்டது.

இப்படியொரு பழமைவாய்ந்த பள்ளியை பராமரிக்காமல் கட்டிடங்கள் இடிந்து, மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடந்த மூன்று வருடங்களாக மரத்தடியில் பாடம் நடத்தி படித்து வருகின்றனர் .

மேலும் கட்டிட வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி இல்லாமல் மாணவர்கள் அன்றாடம் அவஸ்தைப் பட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு அவல நிலையைப் பற்றி ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் வரையில் முறையிட்டும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.  போராட்டம் நடத்தியும் இதுவரை அரசு செவிக்கொடுக்கவில்லை” என்கிறார்.

இந்த நிலையில் நமது ”மின்னம்பலம். காம் இதழ் மூலம் பள்ளியின் அவல நிலையையும், மாணவர்களின் பாதுகாப்பற்ற சூழலையும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாணவர்களுக்கு உதவுங்கள் என்ற கோரிக்கையை வைத்தனர்.

இதுதொடர்பாக ஆதிதிராவிட நலத்துறை வாரியத் தலைவர் மதிவாணனைத் தொடர்புக்கொண்டு, பேரூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியின் அவலநிலையைப் பற்றி விவரமாக சொன்னதும், என்னோட கவனத்திற்கு கொண்டு வந்தது நல்லது, உடனடியாக விசாரித்து புதிய கட்டிடம் கட்டவும் மற்ற வசதிகள் செய்துதரவும் நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியான குரலில் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

தங்கலான் : விமர்சனம்!

ஆளுநர் தேநீர் விருந்து : சபாநாயகர், அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment