சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து அடுக்கு பாதுகாப்பு
நாடு நாளை (ஆகஸ்டு 15) சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. அதனை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.
மேலும், முதல்வர் பங்கேற்கும் சுதந்திர தின நிகழ்ச்சியின் பாதுகாப்பு கருதி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆயிரம் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளை தலைமை செயலகத்தில் கோட்டைக் கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியேற்ற உள்ளார்.
எனவே, சென்னை விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தீவிர சோதனைகள்
சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் யாரேனும் தென்பட்டால் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாநிலத்தின் கடலோர கிராமங்களுக்கு காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் நேற்று 476 தங்கும் விடுதிகள் மற்றும் மேன்ஷன்களில் சமூக விரோதிகள் தங்கி இருக்கிறார்களா என்று திடீர் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, இரு சக்கர வாகனங்கள் உட்பட 5,270 வாகனங்களை சோதனையில் ஈடுபடுத்தினர். அதில், செல்லுபடியாகும் ஒட்டுனர் ஆவணங்களை வைத்திருக்கவில்லை என்று 77 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
போக்குவரத்து மாற்றம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றம் காமராஜர் சாலையில் இருந்து நீட்டிக்கப்பட்டு, தொழிலாளர் சிலையில் இருந்து ராஜாஜி சாலையில் உள்ள ஆர்.பி.ஐ வடக்கு சுரங்கப்பாதை வரை வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வழியாக அனுமதி சீட்டுகள் (பாஸ்) கொண்டு வருபவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

மேலும், ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள், வாலாஜா சாலை, அண்ணா சாலை வழியாக பாரிமுனையை சென்று அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
வங்கிக் கொள்ளையர்கள்: போலீஸ் வெளியிட்ட போட்டோ- டிஜிபி பரிசு அறிவிப்பு!