சிறையிலிருந்து 75 கைதிகள் விடுதலை!

தமிழகம்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்திலுள்ள சிறைகளிலிருந்து 75 கைதிகள் இன்று (செப்டம்பர் 24) விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 144 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின் பேரில் இன்று சிறைகளிலிருந்து 75 கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, சிறைத்துறை மற்றும் சீர்திருத்தக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்த 75 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் இன்று (செப்டம்பர் 24) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலையான கைதிகளின் எண்ணிக்கை

புழல் மத்திய சிறையிலிருந்து 13 கைதிகள், வேலூர் மத்திய சிறையிலிருந்து 2 கைதிகள், கடலூர் மத்திய சிறையிலிருந்து 5 கைதிகள், சேலம் மத்திய சிறையிலிருந்து 1 கைதி, கோவை மத்திய சிறையிலிருந்து 12 கைதிகள், திருச்சி மத்திய சிறையிலிருந்து 12 கைதிகள், மதுரை மத்திய சிறையிலிருந்து 22 கைதிகள், புதுக்கோட்டை மாநில சிறை மற்றும் பொர்ஸ்டல் பள்ளியிலிருந்து 4 கைதிகள், புழல் பெண்கள் சிறப்புச் சிறையிலிருந்து 2 கைதிகள், திருச்சி பெண்கள் சிறப்புச் சிறையிலிருந்து 2 கைதிகள் என மொத்தமாக 75 கைதிகள் இன்று வெளியாகியுள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை

ஆகஸ்ட் 15 ஆம் தேதி 76 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு 21 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை காரணமாகச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதனால் இந்த ஆண்டு தமிழக சிறையிலிருந்து நன்னடத்தை காரணமாக 96 கைதிகள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்” என்று சிறைத்துறை மற்றும் சீர்திருத்தக் காவல் துறை தெரிவித்துள்ளது.

மோனிஷா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசிதரூர் எம்.பி போட்டி!

இனி இணையம் வழியாகவே பட்டா மாற்றிக் கொள்ளலாம்… எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.