சென்னையில் கெட்டுப்போன ஆட்டுக்கால் மற்றும் இறைச்சியை விற்பனை செய்த குடோனுக்கு உணவு பாதுகாப்புத் துறை சீல் வைத்துள்ளது.
சைதாப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டுக் கால்கள் விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
அதனடிப்படையில் நேற்று (செப்டம்பர் 2) சைதாப்பேட்டையில் உள்ள அல்லாதியா மற்றும் ராஜ்மத் மட்டன் சிக்கன் ஸ்டால்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வில் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் குடோனுக்கு சீல் வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ கடந்த 10 நாட்கள் முன்பு எழும்பூரில் 1700 கிலோ ஆட்டுக்கறியை பறிமுதல் செய்திருந்தோம். அதனுடையே தொடர்ச்சியான விசாரணையில் தான் தற்போது சைதாப்பேட்டையில் சோதனை நடத்தினோம்.
வட இந்தியா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயிலில் ஆட்டிறைச்சிகள் வந்து. இறங்குகிறது.
சாப்பிடும் பொருளை இப்படி அடைத்து வைக்கக் கூடாது. அப்படி வைக்கும் போது ஸ்டெபலோ காக்கஸ்,ஈகோலை உள்ளிட்ட பாக்டீரியாக்கள் அதில் வளரும்.
முதலில் சந்தேகத்தின் அடிப்படையில் தான் வந்தோம். ஆனால் சோதனை மேற்கொண்டு ஆய்வுக்கு அனுப்பியதில் அதில் பாக்டீரியாக்கள் வளர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த உணவுகள் பாதுகாப்பானது இல்லை.
நாம் வீட்டில் கூட உப்புக்கண்டம் போட்டு ஆட்டுக்கால்களை வைத்திருப்போம், அவையெல்லாம் பாதுகாப்பாக இருக்கும்.
இங்கு உடைந்த ப்ரீசரில் அவ்வளவு கால்களை அடைத்து வைத்திருந்தனர். இதெல்லாம் எந்தெந்த ஹோட்டல்களுக்கு அனுப்பப்படுகின்றன என்ற லிஸ்ட்டையும் பெற்றுள்ளோம். தொடர்ச்சியாக விசாரணை நடைபெறும்.
சுமார் 600 முதல் 700 கிலோ பாக்டீரியா வளர்ச்சியுடைய ஆட்டுக்கால்களை பறிமுதல் செய்து சென்னை மாநகராட்சி உதவியுடன் அழிக்கவுள்ளோம்.
இந்த குடோன் வெறும் அழுக்காக இருக்கிறது. பூச்சிகள் எல்லாம் ஓடுகின்றன். இதை எப்படி ஜீரணிப்பது என்றே தெரியவில்லை. தற்போது இந்த குடோனை மூடியுள்ளோம். ஒரே நாளில் இவ்வளவு ஆட்டுக்கால்களை வாங்கியிருக்க முடியாது. பல நாட்களாக வாங்கி அடைத்து வைத்திருக்க வேண்டும்.
இவர்கள் மீண்டும் இந்த குடோனை நடத்த விரும்பினால், முறையான பயிற்சி அளித்து அதன்பின் அனுமதிப்போம்.
பொதுமக்கள் நல்ல கடைகளை தேர்ந்தெடுத்து இறைச்சிகளை வாங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
கெட்டுப்போன ஆட்டுக்கால்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பது உணவு பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இம்முறை ‘தேவா’-வாக ரஜினி… ‘கூலி’ படம் அப்டேட்!
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வா?