வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: டிஜிபி எச்சரிக்கை!

தமிழகம்

வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்திகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இது பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வரை செல்லவே அவர், தமிழக அதிகாரிகளுடன் பேசி தமிழ்நாட்டில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜனரல் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து பீகார் துணை முதல்வர், தேஜஸ்வி யாதவ், பாஜக மற்றும் பாஜக ஆதரவு ஊடகங்களால் உண்மைக்கு எதிராக எதுவும் செய்யமுடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறையும் வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பீகார் டிஜிபி ஆர்.எஸ். பாரதியுடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசினார்.

பழைய வீடியோக்கள் தவறாகப் பகிரப்பட்டுப் பரவி வருகிறது. பீகார் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் எங்களின் கவனத்திற்கு வரவில்லை என்று பீகார் காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இப்படி அதிகாரப்பூர்வமாக, வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று தகவல்கள் வெளியானாலும் தமிழ்நாடு காவல்துறை தொடர்ந்து இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி வருகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு காவல்துறையைத் தொடர்பு கொள்ள உதவி எண்களையும் அறிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ’நியூஸ் 18 தமிழ்நாடு’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில், “வதந்திகள் பரப்புபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். தமிழ்நாடு அமைதியாக உள்ளது. வதந்திகளைப் பரப்புவது மிகப்பெரிய குற்றம். வதந்தி பரப்புவது தொடர்பாக இதுவரை 2 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எந்த நோக்கத்திற்காக வதந்தி பரப்பினார்கள் என்ற காரணம் விசாரணையில்தான் தெரியவரும்.

வதந்தி பரப்பியவர்களைக் கைது செய்வதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்று பேசியுள்ளார்.

மோனிஷா

வாச்சாத்தி வழக்கு: நீதிபதி நேரில் விசாரணை!

அதிரடியாய் உயர்ந்த தங்கம் விலை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *