கோவை பிரபல கல்லூரியில் நடந்த கொடூர ராகிங்… 7 மாணவர்கள் சஸ்பெண்ட்!

Published On:

| By christopher

7 students arrested for ragging

கோவையில் முதலாம் ஆண்டு மாணவரை மோசமான முறையில் ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேர் இன்று (நவம்பர் 8) கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 students arrested for ragging

கோவை அவிநாசி சாலையில் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. அக்கல்லூரி வளாகத்திலேயே விடுதியும் உள்ளதால் நூற்றுக்கணக்கான வெளியூர் மாணவர்கள் அங்கு தங்கி படித்து வருகின்றனர்.

இந்தக் கல்லூரியில் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயதான மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவரை நேற்று முன்தினம் இரவில் அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் தங்களது விடுதி அறைக்கு அழைத்து சென்று மது அருந்துவதற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை என்று ஜூனியர் மாணவர் கூறியதை அடுத்து,  சீனியர் மாணவர்கள் கூட்டாக சேர்ந்து அவரை  ஆபாசமாக திட்டி தாக்கியதுடன் மொட்டை அடித்தும் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் காலை 5.30 மணி வரை சீனியர் மாணவர்கள் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

தனக்கு நடந்த கொடுமைகளை திருப்பூரில் உள்ள தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து பதறிப்போன பெற்றோர் கோவைக்கு வந்து கல்லூரி நிர்வாகத்திடம் சீனியர் மாணவர்களின் ராகிங் குறித்து வேதனையுடன் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் ராகிங் செய்தி வெளியே வந்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் நிர்வாகத்தினர் சமரசம் பேச முயன்றுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத பெற்றோர், நடந்த ராகிங் சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.

அதன்பேரில் உடனடியாக கல்லூரிக்கு வந்து சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்களை பீளமேடு போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ராகிங் செய்தது உறுதியான நிலையில், கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தரணிதரன், வெங்கடேஷ், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மாதவன், மணி மற்றும் நான்காம் ஆண்டு படிக்கும் ஐயப்பன், சந்தோஷ், யாலிஷ்  உள்ளிட்ட 7 பேரை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவில் புகழ்பெற்ற பிரபல கல்லூரியில் நடந்துள்ள இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 7 students arrested for ragging

இந்நிலையில் ராகிங் செய்து கைதான மாணவர்கள் 7 பேரையும் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சட்டமன்றத்தில் அநாகரீக பேச்சு… மன்னிப்பு கோரினார் நிதிஷ் குமார்

தீபாவளி விடுமுறை… மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel