வேடசந்தூர் அருகே சுடுகாட்டில் மணல் கொள்ளையர்கள், 7 பேரின் சடலங்களுடன் சேர்த்து மணலை அள்ளிச் சென்றதாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பொத்தாம்பட்டி அருகே ஏ.டி.காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விஸ்வநாதன் என்பவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இறந்துள்ளார். அவரின் சடலத்தை புதைப்பதற்காக புத்தாம்பட்டியில் குளத்தருகே உள்ள சுடுகாட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு சென்று பார்த்தபோது சுடுகாட்டில் மணல் கொள்ளையர்கள் மணல் அள்ளி கொண்டிருந்துள்ளனர். மக்களை பார்த்ததும் மணல் திருடர்கள் ஓடி விட்டனர். இளைஞரின் சடலத்தை புதைத்து விட்டு சென்ற உறவினர்கள் புதன்கிழமை (4 ஆம் தேதி ) காலை சுடுகாட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் புதைக்கப்பட்ட சடலங்களோடு சேர்ந்து மண்ணையும் கொள்ளையர்கள் அள்ளி சென்றது தெரிய வந்தது. மொத்தம் 7 சடலங்கள் மண்ணோடு மண்ணாக எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது நாள் வரை ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கொள்ளையடித்த மணல் கொள்ளையர்கள் இப்போது சுடுகாட்டு மண்ணையும் விட்டு வைக்காதது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு முறையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மணல் கொள்ளையை தடுக்க முடியுமென்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தை சேர்ந்த எம் . அழகர்சாமி என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மணல் கொள்ளை தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது . மனுவில், மணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் கேட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிக மணல் கொள்ளை நடக்கும் தமிழ்நாடு , பஞ்சாப் , மத்திய பிரதேசம் , மகாராஷ்டிரா , ஆந்திர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
தங்கம் விலை இவ்வளவு குறைஞ்சிடுச்சா?- குஷியில் நகைப் பிரியர்கள்!
துடுப்பு போடாமல் படகில் பயணம்… ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிகவில் வலுக்கும் எதிர்ப்பு!
Comments are closed.