தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரில் மறைவான இடத்தில் பதுக்கி வைத்து, கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்த 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தமிழ்நாடு ரேஷன் அரிசிக்குப் பெரிய மார்க்கெட் இருக்கிறது.
கிலோ 40 ரூபாய் கொடுத்துக்கூட வாங்குவதற்கு ஆட்கள் தயாராக இருப்பதால் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து நடக்கும், கடத்தும் பிசினஸ் கொடிகட்டிப் பறக்கிறது.
சென்னையிலிருந்து சூலூர்பேட்டை, நெல்லூர், தடா வழிகளிலும், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாகவும் ஆந்திரா, கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, கம்பம் பள்ளத்தாக்கு வழிகளில் கேரளாவுக்கும், கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடகாவுக்கும் அரிசி மூட்டைகள் கடத்தப்படுகின்றன.
திருத்தணி, திருவள்ளூர் பகுதிகளிலிருந்து கடத்துபவர்கள், பெங்களூரு நெடுஞ்சாலையை அதிகமாகப் பயன்படுத்து கிறார்கள்.
லாரி, மினி லாரி, ஆட்டோ, பைக் எனத் தொடங்கி ரயில் வழி வரை இந்தக் கடத்தல் நடக்கிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,
புதியம்புத்தூர் பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் ஓட்டப்பிடாரம் சிங்கத்தாகுறிச்சியைச் சேர்ந்த முருகன் என்ற துரை என்பவர் தலா 40 கிலோ எடை கொண்ட 15 மூட்டைகளில் மொத்தம் 600 கிலோ ரேஷன் அரிசியை மறைவான இடத்தில் பதுக்கி வைத்து, கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்த போலீஸார், முருகனை மடக்கி பிடித்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
எங்கிருந்து ரேஷன் அரிசியை அவர் கொண்டு வந்தார், எங்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தார், இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்பது குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் – மாதுளம்பழ ஸ்மூதி!