பெரம்பூரில் 9 கிலோ நகை கொள்ளை போனதை விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சென்னை வடக்கு காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஜே.எல் கோல்ட் பேலஸ் என்ற நகைக்கடையில் ஷெட்டரை வெல்டிங் இயந்திரம் வைத்து உடைத்து உள்ளே சென்று, 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணிக்குக் கடையைத் திறக்க வந்த கடையின் சொந்தக்காரர் ஸ்ரீதர் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
சம்பவ இடத்துக்கு சென்ற சென்னை வடக்கு காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இன்று காலை ஜேஎல் பேலஸ் நகைக் கடையில், ஷட்டர் மற்றும் லாக்கரை உடைத்து தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகப் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரிப்பதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரித்து வருகின்றோம். கை ரேகை நிபுணர்களை வரவைத்துள்ளோம். அனைத்து கோணத்திலும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்.
கடையின் முதலாளி இந்த கொள்ளை சம்பவத்தால் அதிர்ச்சியில் உள்ளார்.கடையில் வேலை செய்யும் ஊழியர்களின் பட்டியலைக் கேட்டு வாங்கியுள்ளோம். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
கடையின் ஷெட்டரை வெல்டிங் இயந்திரத்தை வைத்து வெட்டி தான் உள்ளே சென்று திருடியுள்ளார். ஆனால் இதன் சத்தம் அக்கம் பக்கத்தில் உள்ள யாருக்கும் கேட்கவில்லை.
நகைக்கடைகளில் இதபோன்ற கொள்ளை சம்பவங்களைத் தடுக்க அலாரம் வைக்க வேண்டும். உள்ளே வந்து நகையைத் தொட்டால் கடைக்கு வெளியே சத்தம் கேட்கும் அளவிற்கு அந்த அலாரம் ரகசியமாக ஒரு இடத்தில் கண்டிப்பாக வைக்க வேண்டும்.
இந்த இடம் எப்போதும் வாகன சோதனை நடைபெறும் இடம் தான். இரவு 1.40 மணிக்குக் கூட போலீஸ் இந்த இடத்தில் ரோந்து பணியில் இருந்தனர். ஆனால் எந்த இடைவெளியில் இந்த குற்றம் நடைபெற்றது என்பதை விசாரித்து வருகின்றோம்” என்றார்.
மோனிஷா