ஆரணி அருகே வீட்டைப் பூட்டிக் கொண்டு 3 நாட்களாக மாந்திரீகம் செய்து வந்த 6 பேரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆரணி அருகே தசாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் தவமணி – காமாட்சி தம்பதியினர். இவர்களுக்குப் பூபாலன், பாலாஜி என்ற இரு மகன்களும், கோமதி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள்.
இதில் கோமதிக்கு 6 மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் கோமதிக்கு பேய் பிடித்திருப்பதாக இவரின் தாய், தந்தை, சகோதரர்கள் மற்றும் கணவர் என அனைவரும் கடந்த மூன்று நாட்களாக வீட்டைப் பூட்டிக் கொண்டு மாந்திரீகம் செய்து வந்துள்ளனர்.
மூன்று நாட்களாக வீட்டைவிட்டு யாரும் வெளியேவராததால் அக்கம் பக்கத்தினர் கோமதியின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர்.
ஆனால் யாருமே வந்து கதவைத் திறக்காமல் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவைத் திறக்க கூறி கோமதியின் குடும்பத்தாரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் அந்த பேச்சுவார்த்தை பலனளிக்காததால் காவல் துறையினர் அதிரடிப் படை மற்றும் தீயணைப்புத் துறையினரைச் சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.
பின்னர் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வீட்டின் ஒரு பக்கச் சுவரை இடித்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
வீடு முழுவதும் மஞ்சள், குங்குமம், பூக்கள், தேங்காய் போன்ற பொருட்களை வைத்து மாந்திரீக பூஜையில் 6 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்க முயன்றபோது அந்த குடும்பத்தைச் சேர்ந்த பூபாலன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரி ஒருவரின் கையை கடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பிரகாஷிற்கு தலையில் அடிபட்டு ரத்தம் வந்துள்ளது.
இறுதியாக வீட்டிற்குள் அடைந்திருந்த 6 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில தினங்களாகவே கேரளாவில் மாந்திரீகம் செய்து இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விஷயம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த சம்பவம் கேரள மக்களிடம் மட்டுமல்லாது அனைத்து மாநில மக்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
இந்நிலையில் ஆரணியில் வீட்டைப் பூட்டிக் கொண்டு மாந்திரீகம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
தற்கொலை செய்துகொண்டவர் பழங்குடியினரே இல்லை: தமிழக அரசு!
இமாச்சல் தேர்தல்: பிரியங்கா காந்தியின் புது திட்டம்!