ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசின் எண்ணத்தை நிறைவேற்றியிருப்பதாக இருக்கிறது என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் இன்று(நவம்பர் 11) விடுதலை செய்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டி.கே.எஸ். இளங்கோவன், “இது எங்களுடைய கோரிக்கைகளில் ஒன்று.
ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் சிறையிலே வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக, நாங்கள் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தோம்.
ஏனென்றால் இது ஆளுநரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. ஆனால் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து நீதிமன்றம் சென்றோம். தற்போது ஆளுநரின் கால தாமதத்தை காரணம் காட்டி விடுதலை செய்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
இந்த தீர்ப்பு திமுகவின் எண்ணத்தை நிறைவு செய்திருக்கிற ஒன்றாக பார்க்கிறோம். தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
உண்மையிலே இது தமிழக அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. 7 பேரின் விடுதலையை ஆளுநர்தான் தடுத்தாரே தவிர, அரசு அல்ல.
அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் அவர்களை விடுதலை செய்திருக்கவேண்டும், ஆனால் அவர் செய்யத் தவறியதால் தற்போது அதை நீதிமன்றம் செய்திருக்கிறது.
இது தமிழக அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறோம். இதில் அரசியல் பார்க்கக்கூடாது.
30 ஆண்டுகாலம் சிறையில் தங்கள் வாழ்க்கையை தொலைத்தவர்களை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்றார்.
கலை.ரா
ராஜீவ் கொலை வழக்கில் நளினி விடுதலை!
“அறிவுரை தான் வழங்கமுடியும் நடவடிக்கை எடுக்கமுடியாது” – கே.என்.நேரு