யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை!

தமிழகம்

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

`ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது’ என யூடியூப் சேனல் ஒன்றில் கடந்த ஜூலை 22ம் தேதி, யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது.

கடந்த முறை இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ”இதுதொடர்பாக சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சவுக்கு சங்கர் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.

அவர், “இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்புக்கு உட்பட்டதல்ல. ஆகவே இந்த வழக்கை மதுரைக்கிளை விசாரிக்க இயலாது. நீதித்துறையில் இடஒதுக்கீடு என்பது முறையாகப் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக பல நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அமைப்புகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.

என்னுடைய கருத்துகளை தனியே பார்க்கும்போது பிரச்னையை ஏற்படுத்துவதாக தோன்றலாம். ஆனால், அதன் பின்புலத்தை பார்த்தால் உண்மை விளங்கும். நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது” என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டனர்.

தங்கள் தீர்ப்பில், “நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்துக்கு சங்கர் புதியவர் அல்லர். ஆறு வருடங்களுக்கு முன்பே அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. நீதிமன்ற அவமதிப்புக்கான குற்றவியல் புகாரை அவர் ஏற்கனவே எதிர்கொண்டிருக்கிறார். அரசியல் சட்டப் பிரிவு 19 (1) (a) ஒருவருக்கு தனது கருத்தை பேசுவதற்கும் எழுதுவதற்கும் சுதந்திரம் அளித்துள்ளது.

ஆனால் அந்த சுதந்திரம் அரசியலமைப்பு சட்டம் 19(2) க்கு உட்பட்டது. அதாவது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, வெளிநாடுகளுடனான உறவு, பொது அமைதி, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவற்றில் கருத்து சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆனால் சங்கர் பல தருணங்களில் நீதிபதிகள் மீது தனிப்பட்ட முறையிலும் மலிவாகவும் குற்றச்சாட்டுகளை சரளமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்” என்ற நீதிபதிகள் சவுக்கு சங்கர் கூறிய கருத்துகளை எல்லாம் தீர்ப்பில் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.

மேலும், “சங்கர் தனது தவறை உணர்ந்து, தனது கருத்துகளுக்கு வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்திருந்தால் நாங்கள் இந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முடித்து வைத்திருப்போம். ஆனால், அவரது நிலையில் உறுதியாக இருக்கிறார். எனவே நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை (simple imprisonment) அளிக்கிறோம். அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

அவர் நீதிமன்றம் குறித்தும் நீதிபதிகள் குறித்தும் பேசிய அவதூறுகளை சமூக தளங்களில் இருந்து உடனடியாக அகற்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஜெ.பிரகாஷ்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமனம்!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
2
+1
1
+1
1

1 thought on “யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை!

  1. சில நீதிபதிகளின் தீர்ப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள வில்லை, பல்கிஸ் பானு வழக்கில் இந்த நீதிமன்றம் வரவேற்கிறதா? கண்டனம் இவர்கள் தெருவிப்பார்களா? நீதிமன்றம் மன்றம் ஆளுங்கட்சிக்கு அடிமையாக மாறிவிட்டது என்பதை பல்கிஸ் பானு வழக்கில் மக்கள் பார்த்து விட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *