பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டாரா? ED அதிகாரி அங்கித் திவாரியின் வாக்குமூலம்!

தமிழகம்

லஞ்ச வழக்கில் கைதாகியுள்ள அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விஜிலன்ஸ் போலீசார் 60 கேள்விகளை கேட்டு விசாரணை செய்துள்ளனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு துறையால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கித் திவாரியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்துவிசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து டிஎஸ்பி நாகராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் விசாரிக்க தொடங்கினர்.

வீடியோ கேமராக்களை ஆன் செய்தனர்.

டிஎஸ்பி தன்னை அறிமுகம் செய்துக்கொண்டு விசாரணையை ஆரம்பித்தார்.

உங்கள் பெயர் என்ன? வயது?, தந்தை பெயர் என்ன? மனைவி பெயர் என்ன?, எங்கு வசிக்கிறீர்கள்? நிரந்தர விலாசம் என்ன? என்ன படித்திருக்கிறீர்கள்? எப்போது, எங்கே பணியில் சேர்ந்தீர்கள்?

மதுரை அலுவலகத்திற்கு எப்போது பணிமாறுதலில் வந்தீர்கள்? என வழக்கமான கேள்விகளை கேட்டார்.

இந்த கேள்விகளுக்கு பதில் அளித்ததும், கொஞ்சம் குரலை உயர்த்தி கேள்விகளை கேட்க தொடங்கினார் டிஎஸ்பி.

டாக்டர் சுரேஷ்பாபுவை உங்களுக்கு எப்படி தெரியும்?

“தெரியாது…. தெரியும்… பார்த்தது இல்லை”.

அவர் செல்போனுக்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறீர்கள். அவரும் உங்களிடம் பேசியிருக்கிறார், வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி இருக்கீங்களே?

“இல்லை எனக்கு தெரியாது”.

டாக்டர் சுரேஷ்பாபுயிடம் எதற்காக லஞ்சமாக பணம் வாங்கினீர்கள்?

“நான் வாங்கவில்லை”.

உங்களுடைய காரில்தானே. உங்கள் கண் முன்தானே பணம் எடுத்தோம்?

“எனது காரில் எப்படி பணம் வந்தது, யார் வைத்தார்கள் என்று எனக்கு தெரியாது”.

சரி நீங்கள் பணம் பிடித்தால் அதற்கான ரசிதை கொடுப்பீர்களா? பிடிக்கும் பணத்தை எங்கே டெபாசிட் செய்வீர்கள்? எவ்வளவு நாளில் செய்வீர்கள்?

“சார், எனக்கு பிரஷர் இருக்கிறது, மனக் குழப்பத்தில் இருக்கிறேன் எதுவும் சரியாக நினைவுகள் இல்லை.”

டாக்டர் சுரேஷ்பாபுவிடம் நீங்கள் பேசியது, அவர் உங்களிடம் பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.
உங்கள் செல் நம்பர் இதுதானே… வாட்ஸ்அப் நம்பர் இதுதானே…

அங்கித் திவாரி பதில் எதுவும் சொல்லவில்லை.

சார் உங்களைத்தான் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்

“தெரியாது”

இந்த மெசேஜ் நீங்கள் அனுப்பியதுதானே?

“இல்லை, தெரியாது”

இப்படி 6 மணி நேரம் விசாரணை செய்து 60 கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர்.

அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தெரியாது, நினைவு இல்லை, ஆம், இல்லை என்று மழுப்பலான பதிலையே சொல்லியிருக்கிறார் அங்கித் திவாரி.

“எனினும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் தேவையான தகவல்களை கறந்துள்ளனர்” என்கிறார்கள் விசாரணை வட்டாரத்தில்.

இந்த விசாரணையின் முடிவில் சில பேப்பர்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டு உட்கார சொன்னதும், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, உடல் சோர்ந்து, நடை தளர்ந்து, மன கவலையுடன் இருந்துள்ளார்.
அவரை மீண்டும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைத்துள்ளனர்.

சிறையில் மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, கொசுவலை, நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்ற வசதிகளுடன் கூடிய முதல் வகுப்பு அறையில் அவரை அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் நேற்று (டிசம்பர் 15) உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

-வணங்காமுடி

எங்களுக்கு ஒரு படிப்பினை: மு.க.ஸ்டாலின்

பிக்பாஸ்: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *