தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீட்ட பழமையான கற்சிலைகளை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று (ஏப்ரல் 22) பார்வையிட்டார்.
சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளைச் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் அனைத்தும் சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிலைகளை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று (ஏப்ரல் 22) பார்வையிட்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழ்நாடு சிலை தடுப்பு பிரிவு 55 புராதன சிலைகளை மீட்டுள்ளது. 9ஆவது, 10ஆவது நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை. இவையெல்லாம் கோயில் சிலைகள் என்பது தெரியவந்துள்ளது.
இது தென்னிந்திய கோயில்களை சேர்ந்த சிலைகளாகவும் இருக்கலாம். அல்லது வட இந்திய கோயில்களைச் சேர்ந்த சிலைகளாகவும் இருக்கலாம். எந்தெந்த கோயில்களின் சிலைகள் எனக் கண்டறிந்து அங்கு அனுப்பப்படும். இன்னும் 301 சிலை கடத்தல் வழக்குகள் புலன் விசாரணையில் இருக்கிறது.
இது கல் சிலையாக இருந்தாலும் கலை அம்சத்துடன் இருக்கக் கூடிய சிலையாக உள்ளதால், விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெளிநாடுகளில் இருக்கும் சிலைகளை மீட்டு வருகிறோம். நான் டெல்லி சென்று 10 சிலைகளை கொண்டு வந்தேன். இதில் 9 சிலைகள் அந்தந்த கோயில்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1983ஆம் ஆண்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாகச் செயல்பட்டு, பல சிலைகளை மீட்டுள்ளது. தற்போது 1541 புராதன சிலைகள் உள்ளன. 19 மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைத்திருக்கிறோம். இதில் 249 சிலைகளை 3டி வகை வீடியோ எடுத்து http://www.tnidol.com/ வெப்சைட்டில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்திருக்கிறோம்.
தற்போது 55 பழமையான சிலைகளை கண்டுபிடித்து சிலைகடத்தல் தடுப்பு போலீஸார் சாதனை படைத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாகத்தான் பழமையான சிலைகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தீனதயாளன் என்ற சர்வதேச குற்றவாளியிடம் இருந்துதான் அதிகளவு சிலைகளை வாங்கியிருக்கின்றனர். தீனதயாளன் தற்போது இறந்துவிட்டார். அவரிடம் இருந்துதான் இந்த சிலைகளையும் வாங்கியிருக்கின்றனர்.
ஆனால் தீனதயாளன் யாரிடம் இருந்து இந்த சிலைகளை வாங்கினார். எந்த கோயிலிலிருந்து திருடப்பட்டது என விசாரித்து வருகிறோம். சர்வதேச ஒப்பந்தம் அடிப்படையில் இந்த சிலைகள் எங்களுடையது தான் என்று நிரூபித்து நாங்கள் மீட்டு வருகிறோம். அதன்படி சிங்கப்பூரிலிருந்து 16 சிலைகள் எடுத்துவரப்படவுள்ளன” என கூறினார்.
ஆர்.எஸ்.புரத்தில் யாரிடம் இருந்து இந்க சிலைகள் மீட்கப்பட்டது, இதில் யார் குற்றவாளி என்ற கேள்விக்கு, “ஆர்.ஏ புரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இவருக்கும் மற்ற சிலை கடத்தல் வழக்குகளுக்கு தொடர்பு இல்லை” என்றார் டிஜிபி சைலேந்திரபாபு.
பிரியா
ஆணவக்கொலை: தனிச்சட்டம் இயற்ற தயக்கம் ஏன்? – திருமா கேள்வி!