விஷச்சாராயம் குடித்து 53 பேர் மரணம்… 23 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளி கைது!

Published On:

| By Kavi

கடலூரில் கள்ளச்சாராயம் குடித்து 53 பேர் மரணமடைந்த வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

2001ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் புதுப்பேட்டை காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விஷச்சாராயம் குடித்து 53 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டவர்கள் கண் பார்வையை இழந்தனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

அப்போது குற்ற எண் 490/2001, 491/2001, 492/2001 ஆகிய மூன்று வழக்கில் 22 பேரை குற்றவாளிகளாக சேர்த்து பண்ருட்டி நீதிமன்றத்தில் புதுப்பேட்டை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை பண்ருட்டி ஜேஎம் மற்றும் கடலூர் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 22 பேரில் 12 பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். மீதமுள்ள 10 பேரில் ஒருவர் தலைமறைவாக இருந்தார். மற்ற 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.

ஏ9 குற்றவாளியான ஜேம்ஸ் பாண்ட் என்கிற தோஜா ஆனந்த் தலைமறைவாக இருந்து வந்தார்.  இவர், மெத்தனால் சப்ளை செய்தவர். சம்பவம் நடந்த  ஆண்டு, இவரை தேடி வந்த நிலையில், போலீசாருக்கு தோஜா ஆனந்த் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததால் தேடும் பணியை கைவிட்டனர். ஆனால் அவர் உயிரிழக்கவில்லை. போலீசாருக்கு தவறான தகவல் கிடைத்திருக்கிறது.

இந்தநிலையில் தற்போதுள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியும், அதற்கான காரணங்கள் பற்றியும் கேட்டுள்ளார்.

அப்போது வடக்கு மண்டல ஐஜியான அஸ்ரா கார்க் ரிவியூ நடத்திய போது, இந்த குற்றவாளி இருக்கிறாரா… இல்லையா… அவர் இறந்துவிட்டார் என்றால் இறப்புச்சான்று பெற்று வழக்கை முடித்துவிடுங்கள். உயிரோடு இருந்தால் கண்டுபிடித்து கைது செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி.ராஜாராம் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் ஆய்வு செய்து, இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைத்து தோஜா ஆனந்த்தின் குடும்பம் எங்கிருக்கிறது. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா? என்று விசாரணையை தீவிரப்படுத்தினார்.

சம்பவம் நடந்த ஆண்டில் விசாரித்த போது, தோஜா ஆனந்தின் விலாசம் சென்னை என தெரியவந்திருக்கிறது. அந்த விலாசத்தை வைத்து தற்போது தேடியபோது அவர் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு போய்விட்டதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.

அதை வைத்து தூத்துக்குடி சென்ற போலீசார் அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அவர்கள் தோஜா ஆனந்த் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார். ஆனால் எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியாது என்று கூறியிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து தோஜா ஆனந்த் திருநெல்வேலியில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்தபோது அவர் நெல்லையில் இல்லை.

இதையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களின் செல்போன் அழைப்புகளை தனிப்படை ஆராய்ந்ததில், குடும்பத்தினர் தோஜா ஆனந்தை தொடர்புகொண்டு உங்களை போலீசார் தேடி வருகின்றனர் என்ற தகவலை தெரிவித்திருக்கிறார்கள்.
இதைதொடர்ந்து அந்த செல்போன் எண் லொகேஷனை ஆராய்ந்து, தோஜா ஆனந்த் திருப்பூரில் மளிகை கடை நடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் திருப்பூர் சென்று அவரை கைது செய்தனர்.

கடலூரை உலுக்கிய கள்ளச்சாராய மரண வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோஜா ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

போலீசார் மீது கை வைத்தவருக்கு மாவுகட்டு : கடலூரில் நடந்தது என்ன?

விசிக புதிய மாசெக்கள் நியமனம்: ஆதவ் அர்ஜுனா ரோல் என்ன? கட்சிக்குள் சலசலப்பு! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share