டாடா நிறுவனம் சார்பில் ரூ. 5000கோடி முதலீட்டில் ஆப்பிள் செல்போனுக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா பரவலுக்குப் பிறகு சீனாவில் தொழில்கள் முடங்கியதால் ஐபோன் தயாரிப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து தென் ஆசிய நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவிற்கு அதிகளவில் மாற்றி வருகிறது.
இதன் ஒருபகுதியாக தற்போது டாடா நிறுவனம் சார்பில் ஆப்பிள் செல்போன்களுக்கான உதிரிபாகங்கள் விரைவில் தயாரிக்கப்பட இருக்கிறது.

இதற்காக ஓசூரில் புதிய தொழிற்சாலை தொடங்க டாடா நிறுவனம் ரூ. 5000கோடி முதலீடு செய்துள்ளது.
டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட புதிய நிறுவனத்திற்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் 500ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொழிற்சாலைக்கான பூமி பூஜை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
டாடா நிறுவனம் தொழிற்சாலையை தங்கள் மாநிலத்தில் தொடங்கவேண்டும் என்று கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
இறுதியில் கர்நாடகாவை பின்னுக்கு தள்ளி தமிழகம் இந்த திட்டத்தை பெற்றுக்கொண்டது.
எலக்டரானிக்ஸ் உற்பத்திக்கு தமிழக அரசு வகுத்துள்ள சாதகமான கொள்கைகளும், அதேபோன்று ஃபாக்ஸ்கான், ஃப்ளெக்ஸ், சாம்சங், டெல், நோக்கியா, மோட்டோரோலா மற்றும் பிஒய்டி போன்ற முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வருவதும் டாடா நிறுவனம் தொழிற்சாலையை ஓசூரில் தொடங்க ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

மேலும் தமிழ்நாட்டில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக தைவான் நிறுவனத்துடன் டாடா குழுமம் பேசி வருகிறது.
தைவானைச் சேர்ந்த செல்போன் நிறுவனமான விஸ்ட்ரான் கார்ப்பரேஷனுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விஸ்ட்ரானிடம் உயர் தொழில்நுட்பத்தை பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்த பேச்சு வார்த்தை வெற்றி பெற்றால் இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் முதல் உள்நாட்டு நிறுவனம் என்ற பெருமையை டாடா குழுமம் பெறும்.
கலை.ரா
ரஷ்யாவிடம் 75,000 டன் நிலக்கரி வாங்கிய டாடா நிறுவனம்!