கொட்டித் தீர்த்த கனமழை –  5,000 கோழிகள் உயிரிழந்த சோகம்!

தமிழகம்

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால், கெடார் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5,000 கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றன.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் இரவு இடி, மின்னல், காற்றுடன் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக, விழுப்புரம் – திருக்கோவிலூர் சாலையில் தரைப்பாலம் கட்டப்படும் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுச்சாலைகள் நீரில் மூழ்கின. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர். விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக, மணம்பூண்டி பகுதியில் 273 மி.மீ மழை பெய்தது. மேலும், முகையூரில் 203 மி.மீ மழையும், சூரப்பட்டு பகுதியில் 214 மி.மீ மழையும், கெடாரில் 150 மி.மீ மழையும் பதிவாகியிருக்கிறது. இதனால், அந்தப் பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது. இதற்கிடையே, கெடார் பகுதியிலுள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், 5,000 கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றன.

கெடார் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் 10 வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்த இடத்தில், கோழிப்பண்ணை அமைத்திருக்கிறார். இதில், தனியார் நிறுவனத்தின் மூலம் கறிக்கோழிகளை இறக்குமதி செய்து வளர்த்து வந்திருக்கிறார். சுமார் 6,340 சதுர அடியில் அமையப்பெற்ற அந்தப் பண்ணையில், 5,000 கோழிகளை வளர்த்து வந்திருக்கிறார். இதன் எதிர்கால சந்தை மதிப்பு பத்து லட்சம் ரூபாய் எனச் சொல்லப்படுகிறது.

தற்போது கோழிகளை வளர்ப்பதற்கு இறக்குமதி செய்து 26 நாட்களேயான நிலையில், அதற்கான தீவனங்களை வழங்கி பராமரித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அந்தப் பகுதியில் பெய்த கனமழையால், கெடார் பகுதியிலிருந்து சித்தாமூர் ஏரிக்குச் செல்லும் வாய்க்காலில் அதிக அளவிலான நீர் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. அப்போது, வாய்க்காலில் அதிகப்படியாகச் சென்ற மழைநீர், கிருஷ்ணமூர்த்தியின் கறிக்கோழிப் பண்ணையினுள் புகுந்திருக்கிறது. இதில், கோழிப்பண்ணையிலிருந்த கறிக்கோழிகள் முழுவதும் நீரில் மூழ்கி இரவே இறந்துபோயிருக்கின்றன.

மழை ஓரளவுக்கு நின்றதும், கிருஷ்ணமூர்த்தி கோழிப்பண்ணைக்குச் சென்று பார்த்தபோது, கோழிகள் நீரில் மூழ்கி இறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் இறந்த கோழிகளை நேரில் பார்வையிட்டதைத் தொடர்ந்து, அந்தக் கோழிகளைப் பணியாளர்களைக் கொண்டு அப்புறப்படுத்தி, கோழிப் பண்ணைக்கு அருகிலேயே ஜே.சி.பி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி புதைத்திருக்கிறார்.

இதுகுறித்து பேசியுள்ள கிருஷ்ணமூர்த்தி, “எனக்கு வயசு 45 ஆகுது. எனக்கென இருந்த நிலம், வரப்பெல்லாம் இழந்துட்டேன். ஏதோ இப்படி பண்ணை வெச்சாவது பிழைச்சுக்கலாம்னு நினைச்சேன். எனக்கான பிழைப்பே, இந்தக் கோழிப் பண்ணையைப் பார்த்துக்கிறதுதான். எனக்கு வேறு பொருளாதாரம் கிடையாது. கடைசியில இப்படி ஆகிடுச்சி. அரசாங்கம் ஏதாவது இழப்பீடு வழங்கி உதவினால் நன்றாக இருக்கும்” என்கிறார்.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க! 

கொட்டும் கனமழை: 700ஐ தாண்டிய ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!  

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *