12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 50 ஆயிரம் மாணவர்கள் வராதது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளே 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வருகை தரவில்லை.
தொடர்ந்து மார்ச் 17 ஆம் தேதி நடைபெற்ற ஆங்கில தேர்வையும் ஏராளமான மாணவர்கள் எழுதவில்லை.
எதனால் இவ்வளவு மாணவர்கள் தேர்வை புறக்கணித்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “கிட்டத்தட்ட 5.9 சதவீதம் மாணவர்கள் மொழித்தாள் மற்றும் ஆங்கில தேர்வை எழுதவில்லை.
இந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுகள் முடிந்த பிறகு ஆலோசனை நடத்துவதை விட உடனடியாக இந்த பிரச்சனைக்குத் தீர்வு எடுக்க வேண்டும்.
மொழித்தாள் தேர்வுகளை எழுதவில்லை என்றாலும் மீதமிருக்கும் தேர்வுகளை அனைத்து மாணவர்களையும் எழுத வைக்க வேண்டும்.
குறிப்பாகத் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் அதிகளவு தேர்வுகளை எழுதவில்லை.
எதனால் இவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. கடந்த ஆண்டு இதேபோன்ற சூழ்நிலையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.
இனிவரும் தேர்வு நாட்களில், தேர்வுகள் முடிந்த பிறகு தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்த விவரம் மற்றும் அவர்கள் தேர்வெழுத வராததற்கான காரணம் குறித்து கண்டறிய சொல்லப்பட்டது.
குடும்ப சூழ்நிலை மற்றும் தேர்வு குறித்த அச்சம் காரணமாக சில மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. எனவே பெற்றோர்களும் மாணவர்கள் தேர்வெழுத பள்ளிக்கல்வித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதே போல ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கும் எதனால் மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என்பதைக் கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி நிர்வாக அமைப்பு மூலமாக மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 10 ஆகிய தேதிகளில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இருந்ததை போல மாணவர்கள் வருகை குறைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ஏப்ரல் 10 ஆம் தேதி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.
பள்ளிக்குச் சரியாக வராத மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாணவர்களிடம் கல்வி கற்கும் எண்ணத்தை உருவாக்க முடியும். கொரோனாவிற்கு பிறகு சூழ்நிலை மாறியுள்ளதால் மாணவர்கள் கல்வியை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று பேசியுள்ளார்.
மோனிஷா
ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை: மருத்துவர் பேட்டி!
ஓபிஎஸ் ஆதரவாளர் வழக்கு: ஈபிஎஸ் பதில்!