ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை மார்ச் 17ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
அணி வகுப்பு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கும் உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வரும் 5ம் தேதி பேரணி நடைபெற இருப்பதால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அரசின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது
தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், ”உளவுத்துறை தகவல் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது மறுப்பது என்பது அரசின் உரிமை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. உளவு துறையின் எச்சரிக்கைகளை அப்படியே கடந்து செல்ல முடியாது.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழ்நாடு அரசு முழுத் தடை விதிக்கவில்லை. நடைமுறைதான் தவறு என்கிறோம். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் பேரணிக்கு கட்டுப்பாடுகள் அவசியமாகிறது.” என்று வாதிட்டார்.
தொடர்ந்து கோவை வெடிகுண்டு தாக்குதல், பி.எப்.ஐ உள்ளிட்ட விவகாரங்களையெல்லாம் சுட்டிக்காட்டி ஆர் எஸ் எஸ் பேரணிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ”தமிழ்நாட்டின் 50 மாவட்டங்களில் எங்களது பேரணியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தியுள்ளது” என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியான அரசு தரப்பு வழக்கறிஞர், ”தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் உள்ளதை நான் கேள்விப்பட்டதே இல்லை” என்று சிரித்தபடியே கூறியுள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கினை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
10 ஆம் தேதி பதவியேற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்?
“நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருக்கிறதா?”: இளங்கோவன் கேள்வி!