திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர் மலை யானை காப்பகமாக மாற்றப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மேற்கு தொடர்சி மலையில், 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2761 யானைகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்திருந்தன. 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை அதிகரித்ததாக வனத்துறை தெரிவித்தது. இதனால், சட்டபேரவையில் மேற்கு தொடர்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக மாற்றப்படும் என்று மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அறிவித்துள்ளார். இதற்காக அகஸ்தியர் மலையில் 1,197 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு யானைகள் காப்பகத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளதால், அந்த இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் மாறியுள்ளது. மேலும் தமிழகத்தில் ஏற்கனவே, நீலகிரி, கோயம்புத்தூர், ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் யானை காப்பகங்கள் இருக்கின்றன. தற்போது, தமிழகத்தில் 5 ஆவது யானைகள் காப்பகமாக அகஸ்தியர் மலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு யானைகளின் பாதுகாப்பிற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மோனிஷா