உரிமம் இல்லாமல் இயங்கும் 5 ஸ்டார் ஹோட்டல் பார்கள்!
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு 5 ஸ்டார் ஹோட்டல்கள் காலாவதியான உரிமங்களுடன் பார்களை இயக்கி வருவதாகக் குற்றச்சாட்டு எழுத்துள்ளது. license expired 5star hotels
தமிழக அரசின் டாஸ்மாக்தான் தமிழ்நாடு முழுவதும் மது விற்பனையைக் கட்டுப்படுத்துகிறது. தனியார் பார்கள், 5 ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் பார்கள் தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் தகுந்த கட்டணம் செலுத்தி பார் நடத்துவதற்கான உரிமம் பெற வேண்டும். இந்த உரிமம் இருந்தால் தான் பார்கள் டாஸ்மாக்கில் இருந்து மது வாங்க முடியும்.
இந்த உரிமம் ஏப்ரல் முதல் மார்ச் வரை என ஓர் ஆண்டுக்குச் செல்லும். அதாவது ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி இறுதிக்குள் கட்டணத்தைச் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
5 ஸ்டார் ஹோட்டல்களுக்கு FL2 என்ற உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கான சாதாரண கட்டணம் ரூ.20.32 லட்சம். அதுவே நாள் முழுவதும் மது விநியோகிக்க விரும்பினால் ரூ.40.32 லட்சம் அரசுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பான்மையான 5 ஸ்டார் ஹோட்டல் பார்கள் காலாவதியான உரிமங்களுடன் இயங்கிவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சில 5 ஸ்டார் ஹோட்டல்களின் பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. ஹோட்டலில் தங்காத வெளியாட்களுக்கு மது விநியோகித்ததற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று ஹோட்டல் துறையில் இருக்கும் சிலர் சொல்கிறார்கள்.
காலாவதியான உரிமங்கள் குறித்துப் பேசிய தென் இந்திய ஹோட்டல் சங்கத்தின் இயக்குநர் சுந்தர் சிங்காரம், ”நாங்கள் பார் உரிமத்திற்கான கட்டணம் செலுத்தியவுடன் எங்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும். ஆனால் கலால் துறை, உரிமம் வழங்க ஒன்றிரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன. இதற்கு மாற்றாக, நாங்கள் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை வைத்து டாஸ்மாக்கில் இருந்து மது வாங்கிக்கொள்ள அனுமதிக்கிறார்கள்” என்றார்.
ஒன்றிய சுற்றுலாத்துறை ’தமிழக அரசின் இந்தப் போக்கு சரி இல்லை’ என்று சுட்டிக்காட்டியுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”தரம் தாழ்ந்த சொற்களை பயன்படுத்துகிறார்” : தங்கர் மீது ஜெயா பச்சன் குற்றச்சாட்டு!
“அர்ஷத் நதீமும் என்னுடைய மகன்தான்”… நீரஜ் சோப்ராவின் அம்மா சரோஜ் தேவி உருக்கம்!