மடிப்பாக்கம் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 5) தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக மூவரசம்பட்டு பகுதியில் உள்ள குளத்துக்கு அர்ச்சகர்கள், அப்பகுதி இளைஞர்கள் சாமியை பல்லக்கில் தூக்கிக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து சுமார் 25 பேர் குளத்தில் இறங்கி குளித்த போது 5 பேர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர்.
இதனால் கரையில் இருந்தவர்கள் அச்சமடைந்து தேடியும் கிடைக்காததால் போலீஸுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வேளச்சேரி மற்றும் கிண்டி தீயணைப்புத் துறையினர் 5 பேரின் உடல்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேரும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.
இவர்கள் ராகவன்(18) சூர்யா (22) பானேஷ் (22) யோகிஸ்வரேன் (21) மற்றொரு ராகவன்(22) என்பதும் அனைவரும் அர்ச்சகர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்து அவர்களது குடும்பத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், சாமி சிலையையும், சில அர்ச்சனை பொருட்களையும் நீரில் மூழ்கி எடுக்க சுமார் 25 பேர் குளத்தில் இறங்கினர்.
இரண்டு முறை நீரில் மூழ்கி எழுந்து, மூன்றாவது முறையாக மூழ்கும் போது ஒரு அர்ச்சகர் மட்டும் தத்தளித்துக்கொண்டிருந்தார். அவரை காப்பாற்ற மற்றவர்கள் சென்றபோதுதன் இப்படி நடந்துவிட்டது” என்கின்றனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவாலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த கோயிலுடைய பொறுப்பு யாரிடம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். இது பஞ்சாயத்து குளம் என்று சொல்கிறார்கள். எதை வைத்து பக்தர்கள் இங்கே வந்தார்கள் என்று விசாரிக்க வேண்டும். 18 வயது சிறுவர்களும் இறந்துள்ளனர்.
இனி இதுபோன்று உயிரிழப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. விழா தொடர்பான நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட்டதா என தற்போது கூற முடியாது” என்றார்.
கோயில் விழாவில் 5 இளைஞர்கள் உயிரிழந்திருப்பது சென்னை வாசிகளை உலுக்கியுள்ள நிலையில், உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு இரங்கலையும் ஆறுதலையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5 இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
பிரியா
அட்டப்பாடி கொலை வழக்கு: தண்டனை விவரம்!
கொரோனா: ஆரம்பமாகிறது வொர்க் ஃப்ரம் ஹோம்!