ஒன்றிய அரசின் 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் தயிர், நெய், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் இன்று (ஜூலை 21) உயர்த்தியுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நேற்று இரவு வெளியிட்டுள்ளது ஆவின்.
எடையளவுச் சட்டத்தின் படி பேக் செய்யப்பட்ட பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரியாக விதிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் ஜி.எஸ்.டி கவுன்சில் செய்தி வெளியிட்டது. இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கடந்த திங்கட்கிழமை ( ஜூலை 18 ) அமலுக்கும் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் தயிர், நெய், லஸ்சி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை உயர்த்தி திருத்தப்பட்டுள்ள விலைப் பட்டியலை நேற்று (ஜூலை 20) அறிவித்துள்ளது.
அதன்படி ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்த்தப்பட்டுள்ளது 1 லிட்டர் ஆவின் நெய் ரூ.535ல் இருந்து ரூ.580 ஆகவும், 500 மிலி ஆவின் நெய் ரூ.275ல் இருந்து ரூ.290 ஆகவும் அதிகரித்துள்ளது. 5 லிட்டர் நெய் ரூ.2,900, 15 கிலோ ரூ.9,680 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் ஆவின் தயிர் விலை 1 கிலோ ரூ.100ல் இருந்து ரூ.120 ஆகவும், 500 மில்லி பாக்கெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 200 மில்லி ரூ.18 ஆகவும், 100 கிராம் 10 ரூபாயிலிருந்து 12ரூ பாய் ஆகவும், 400 கிராம் பிரிமியம் கப் தயிர் ரூ.40-ல் இருந்து 50 ஆகவும், பிரிமியம் தயிர் ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும் அதிகரித்துள்ளது. 50 கிராம் தயிர் விலை உயர்த்தப்படாமல் ரூ.5-க்கு விற்கப்படுகிறது.
200 மில்லி பாக்கெட் லஸ்சி ரூ.20, புரோபயோடிக் லஸ்சி ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 மில்லி மோர் ரூ.15-ல் இருந்து ரூ.18 ஆகவும், 200 மில்லி மோர் பாட்டில் ரூ.10-ல் இருந்து ரூ.12 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அனைத்து ஆவின் விற்பனை மையங்கள் மற்றும் முகவர் மையங்களில் நடைமுறைக்கு வந்தது.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவரும், மக்கள் நீதி மய்யத்தின் மாநில தொழிற்சங்க தலைவருமான சு.ஆ. பொன்னுசாமி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
”தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிப்பது என ஒன்றிய பாஜக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுத்ததோடு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 18ம் தேதி முதல் அதனை அமுல்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் தயிர் பாக்கெட்டிற்கான விற்பனை விலையை உடனடியாக உயர்த்தின. அதில் பல தனியார் பால் நிறுவனங்கள் தயிரினை லிட்டருக்கு 4.00ரூபாய் முதல் 10.00ரூபாய் வரை உயர்த்தி 5% ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு 15% வரை விலையை உயர்த்தின.
இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் தயிர், நெய், லஸ்ஸி உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை 21.07.2022 இன்று முதல் அமுல்படுத்துவதாக 20.07.2022ம் தேதியிட்ட சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு உடனடியாக இந்த விற்பனை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
ஏனெனில் இந்த விற்பனை விலை உயர்வானது இந்த ஆண்டில் மட்டும் இரண்டாவது முறையாகும். அதுமட்டுமின்றி கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு 4.00ரூபாயும், எருமைப்பால் லிட்டருக்கு 6.00ரூபாயும் உயர்த்திய நிலையில் அதே 2019ம் ஆண்டில் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 30.00ரூபாயும், தயிருக்கு 4.00ரூபாயும் உயர்த்தியது.
அதன் பிறகு 2020 ஜூலை மாதம் நெய் ஒரு லிட்டருக்கு 20.00ரூபாயும், 2022 இதே ஆண்டு மார்ச் மாதம் லிட்டருக்கு 20.00ரூபாயும் உயர்த்திய நிலையில் மூன்று மாத இடைவெளியில் தற்போது ஒரு லிட்டர் நெய்க்கு 50.00ரூபாயும், ஒரு கிலோ தயிருக்கு 10.00ரூபாயும் வரலாறு காணாத வகையில் விற்பனை விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாமல் நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான விற்பனை விலையை மட்டும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே போவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.
அதுமட்டுமின்றி 21ம் தேதி அமுலுக்கு கொண்டு வரப்படும் தயிர், நெய், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களுக்கான விற்பனை விலை உயர்வு குறித்த அறிவிப்பை 20ம் தேதி அறிவித்து விட்டு இந்த விற்பனை விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை சில்லறை வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பால் முகவர்கள் கொண்டு போய் சேர்க்க போதிய கால அவகாசம் கொடுக்காமல் அதனை உடனடியாக மறுநாள் விடியற்காலை முதற்கொண்டு அமுல்படுத்த வேண்டும் என்பது சர்வாதிகார போக்காகும். ஆவின் நிர்வாகத்தின் இந்த சர்வாதிகார போக்கினையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார் பொன்னுசாமி.
க.சீனிவாசன்