சென்னை நங்கநல்லூர் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலின் தீர்த்தவாரி திருவிழாவின்போது குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, திருவிழாக்களின் போது கூடுதல் பாதுகாப்பை அரசு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
அறநிலையத் துறையின் அலட்சியத்தாலும் மெத்தனத்தாலுமே இத்தகைய அசம்பாவிதங்கள் கோவில் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடைபெறுகிறது.
உயிரிழந்த 5 அர்ச்சகர்களுமே 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளவயதினர் என்பது மேலும் வருந்தத்தக்கது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க மிகுந்த கவனத்துடன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
பாஜக தலைவர் அண்ணாமலை
திருவிழாக்களின் போது மக்களுக்கு காவல் துறையினர் இனிமேல் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உயிர்இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடி நிவாரணமாக அரசு கொடுக்கும் 2 லட்சம் ரூபாயை, 5 லட்சமாக உயர்த்திக் கொடுக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
மறைந்தவர்கள் அனைவரும் ஆன்ம அமைதி பெறவும், அவர்களின் குடும்பத்திற்கு மன ஆறுதலைத் தரவும் இறைவனை வணங்கி வேண்டுகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
கோயில் குளத்தில் ஆழம் அதிகம் என்றும், இந்த நிகழ்ச்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதையும் கடந்து தீர்த்தவாரி நடைபெற்ற நிலையில், தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் விபத்துக்கு காரணம் ஆகும்.
இனி வரும் காலங்களிலாவது இத்தகைய நிகழ்ச்சிகளின் போது விபத்துகள் நடக்காத வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் அப்பாவி மக்கள் உயிரிழப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்
தமிழக அரசு,நீர் நிலைகளில் பொது மக்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கையை முன்னேற்பாடாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
தர்மலிங்கேஸ்வரர் தெப்பக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின் போது 5 பேர் நீரில் மூழ்கி பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இதுபோன்ற நிகழ்வுகளை தவி்ர்ப்பதற்கு பாதுகாப்பாக தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை கட்டாயம் அழைக்கப்பட்டு உரிய முறையில் நடத்துவதற்கு தகுந்த ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
பிரியா
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தங்க நாணயம்!
மதுரை மேம்பாலம்: இனி விரைவாக திருச்சி, சென்னை செல்லலாம்!