tnpsc 5 new members appointed
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு இன்று (பிப்ரவரி 16) 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி என்பது ஒரு தலைவரும் 14 உறுப்பினர்களும் கொண்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேர்வுகளை நடத்தும் சுயேச்சையான ஆணையமாகும்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் அதிமுக ஆட்சி காலத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவராக 13.04.2020 அன்று நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பணியில் இருந்த அவர் ஜூன் 9 2022 அன்று ஓய்வு பெற்றார். ‘
அவருக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி முனியநாதன் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டார். 10.06.2022 முதல் இன்று வரை அவர் தொடர்ந்து பொறுப்புத் தலைவராக இருந்து வருகிறார்.
இன்று வரை தலைவர் நியமிக்கப்படவில்லை.
இந்தசூழலில் இன்று புதிதாக டிஎன்பிஎஸ்சிக்கு 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவனருள், ஐஆர்எஸ் அதிகாரி சரவண குமார், மருத்துவர் தவமணி, உஷா சுகுமார், முனைவர் பிரேம் குமார் ஆகிய 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவி வகிப்பார்கள் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவனருள் ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக இருந்தார். அதன் பின் பத்திரப் பதிவுத் துறை தலைவராக பதவி வகித்தார். இந்த நிலையில் அவர் பணி ஓய்வு பெற்ற பின் இப்போது டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்,
இன்னொரு உறுப்பினரான உஷாகுமாரி எமர்ஜென்சி காலத்தில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினுடன் சிறையில் இருந்து சித்திரவத்தைக்கு உள்ளான சிட்டி பாபுவின் மருமகள் ஆவார்.
மற்றொரு உறுப்பினரான ஐ.ஆர்.எஸ். அதிகாரி சரவணகுமார் சேலத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி கூட்டுறவுத் துறையில் இணை பதிவாளராக பணியாற்றுகிறார்.
டி.என்.பி.எஸ்.சிக்கு புதிய தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை பரிந்துரைத்து தமிழக அரசு ஆளுநருக்கு கோப்பு அனுப்பிய நிலையில், அதை ஆளுநர் நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி. முறையான முழு நேர தலைவர் இல்லாமலேயே இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழ்நாடு அரசு சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட மேலும் சிலரும் சிபாரிசுப் பட்டியலில் இருந்தாலும்… ஆளுநர் சில பெயர்களுக்கே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக பேராசிரியர் கே. ஜோதி சிவஞானம், டாக்டர் கே. அருள்மதி, எம். ஆரோக்கியராஜ் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து வந்த நிலையில், இன்று புதிதாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முறையான முழு நேர தலைவர் உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய நிலையில் டி.என்.பி.ஸ்.சி. நிர்வாகக் குழு இன்னமும் முழுமை அடையவில்லை.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” : வானிலை மையம் எச்சரிக்கை
வங்கி கணக்கு முடக்கம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மல்லிகார்ஜூன கார்கே
tnpsc 5 new members appointed