தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (ஜூலை 16) அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி டிஆர்பி வெளியிட்டது. அதன்படி ஜூன் 23 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்கான இணைய விண்ணப்பப் பதிவு மார்ச் 15-ம்தேதி வரை நடத்தப்பட்டது. இதனையடுத்து நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வரும் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக தேர்வர்கள் தயாராகி வரும் நிலையில், தற்போது கூடுதலாக 1000 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 2768ஆக அதிகரித்துள்ளது. இன்னும் தேர்வுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் அரசின் இந்த அறிவிப்பு தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடைநிலை ஆசிரியர் பணித் தேர்வு விவரம் :
இடைநிலை ஆசிரியர் பணித் தேர்வு கொள்குறி வகை (ஒஎம்ஆர்) விடைத்தாள் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. வினாத்தாள் இரு பிரிவுகளாக இருக்கும். முதல் பிரிவு கட்டாய தமிழ் தகுதித் தேர்வாகும். இதில் 30 கேள்விகள் இடம்பெறும். அதற்கு 50 மதிப்பெண். தேர்வெழுத 30 நிமிடம் அவகாசம் வழங்கப்படும். அதில் குறைந்தது 20 மதிப்பெண் எடுக்க வேண்டும்.
தமிழ் கட்டாய தகுதித் தேர்வு: அடுத்ததாக பொதுப் பிரிவு வினாத்தாளில் 150 வினாக்கள் கேட்கப்படும். தேர்வுக்கு 3 மணி நேரம் அவகாசம் தரப்படும். மொத்தம் உள்ள 150 மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் 60-ம், இதர பிரிவினர் 45-ம் எடுக்க வேண்டும். கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பொதுப் பிரிவு விடைத்தாள் திருத்தப்படும்.
இதற்கிடையே இந்த போட்டித்தேர்வை டெட் முதல் தாள் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே எழுத முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”பஞ்சர் கடை வையுங்கள்” : கல்லூரி திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!