சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை (நவம்பர் 12) கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். நேற்று வெள்ளிக் கிழமை என்பதால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர்.
அந்த வகையில் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்தும் அதே போன்று சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்தும் சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு பேருந்துகளிலும் ஏராளமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து எதிரே வந்துக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது.
இந்த கோர விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை, ஆம்னி பேருந்து ஓட்டுநர் சையத், பயணிகள், கிருத்திகா, அஜித், முகமது பையஸ் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்து நெரிசல் சரிசெய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஆய்வு செய்தார்.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகள் மத்தியில் இந்த கோர விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தித்திக்கும் தீபாவளி… தினமும் கொண்டாடுங்கள்!
ஹெல்த் டிப்ஸ்: பட்டாசு புகையினால் ஏற்படும் சுவாசப் பிரச்சனையை எளிதில் குணப்படுத்தும் வழிமுறைகள்!