தென்மேற்கு வங்கக்கடலில் இன்று மதியம் ‘ஃபெஞ்சல்’ புயல் உருவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அறுவை செய்யவிருந்த சம்பா பயிற்களும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கின.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தென்மேற்கு வங்கக்கடலில் இன்று மதியம் 2.30 மணியளவில் ‘ஃபெங்கல்’ புயல் உருவாகியுள்ளது. இதனை ‘ஃபெஞ்சல்’ என்று உச்சரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
இதன் காரணமாக இன்று (நவம்பர் 29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழையும்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
30-11-2024: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழையும்,
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தரைக்காற்று எச்சரிக்கை:
29-11-2024: வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் (நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், மாவட்டங்கள்) புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேலும் வங்கக்கடலில் இன்று ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
திருப்பூர் கொடூரம்… மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாய கொலைகள்!
‘சொர்க்கவாசல்’ திருடப்பட்ட கதையா? ஆர்.ஜே.பாலாஜி இப்படிப்பட்டவரா?
திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!