கோவை உக்கடம் பகுதியில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து தனிப்படை போலீசார் விசாரிக்க கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி காரில் பயணித்த ஜமேஷா முபின் என்ற நபர் சிலிண்டர் வெடித்து உடல் கருகி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் ஜமேஷா முபின் வீட்டில் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
கோவில் அருகே ஜமேஷா முபீன் பயணித்த கார் காலை 4 மணியளவில் வெடித்து சிதறியது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.
சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ஜமேஷா முபீன் உள்பட 4 பேர் அவரது வீட்டிலிருந்து சாக்குப்பையில் மர்ம பொருட்களை எடுத்து செல்வது போன்ற சிசிடிவி காட்சிகளும் பதிவாகி இருந்தது.
இந்தநிலையில், ஜமேஷா முபீன் உயிரிழந்த வழக்கில், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா மற்றும் முகமது அசாருதீன், ஜி.எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ்,
ஃபிரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை போலீசார் அக்டோபர் 23-ஆம் தேதி கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது உபா, சதி செய்தல், இரு பிரிவினர் இடையே விரோதத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது,
“ஜமேஷா முபின் பயணித்த மாருதி கார் 10 பேரிடம் கைமாறியது தெரியவந்ததுள்ளது.
மேலும், ஜமேஷா முபின் வீட்டில் பொட்டாசியம் நைட்ரேட், சார்கோல், அலுமினியம் பவுடர், சல்பர் என 75 கிலோ வெடி பொருட்களை கைப்பற்றி உள்ளோம்.” என்று தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் தனிப்படை போலீசார் கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று இரவு ஆஜர் படுத்தினர்.
அவர்களை நவம்பர் 8-ஆம் தேதி வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ஐந்து பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
செல்வம்
சர்தார் இரண்டாம் பாகம் உறுதி : கார்த்தி
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்… ஒன்றிய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்! – வைகோ