பெரியார் பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாட்டிறைச்சி பிரியாணி விநியோகிக்க முயன்ற 7 பெண்கள் உள்ளிட்ட பெரியார் உணர்வாளர்கள் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியாரின் 146-வது பிறந்த நாளையொட்டி கரூரில் லைட் ஹவுஸ் முனையில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று (செப்டம்பர் 17) சாமானிய மக்கள் நலக்கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அவர்கள் பொதுமக்களுக்கு மாட்டிறைச்சி பிரியாணி விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், கரூர் நகர போலீஸார் மாட்டிறைச்சி பிரியாணியை பொது இடத்தில் விநியோகிக்க எதிர்ப்பு தெரிவித்து பிரியாணி வாகனத்தை அனுமதிக்க மறுத்து பெரியார் சிலைக்கு முன்பாகவே மடக்கினர்.
இதையடுத்து, பொது இடத்தில் மாட்டிறைச்சி பிரியாணியை விநியோகிக்க அனுமதி இல்லை. அதனால் தனியார் இடத்தில் வைத்து பிரியாணியை விநியோகிக்க போலீஸார் அறிவுறுத்தினர்.
ஆனால், சாமானிய மக்கள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கிய கழகம், சுயாட்சி இந்தியா, தோழர் களம், தமிழ்ப் புலிகள் இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் உள்ளிட்ட பெரியார் உணர்வாளர்கள் பெரியார் சிலை அருகே தான் மாட்டிறைச்சி பிரியாணியை விநியோகிப்போம் என உறுதியாகக் கூறினர்.
இதனால் சாமக மாநில பொதுச்செயலாளர் குணசேகரன், சுயாட்சி இந்தியா வேலு, மக்கள் அதிகாரம் சக்திவேல், மக்கள் கலை இலக்கிய கழகம் அரசப்பன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முகிலன் மற்றும் 7 பெண்கள் உள்ளிட்ட 44 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : ஜம்மு காஷ்மீர் முதற்கட்ட தேர்தல் முதல் புதுச்சேரியில் பந்த் வரை!
கிச்சன் கீர்த்தனா : தானிய கஞ்சி
ஹெல்த் டிப்ஸ்: மழைக்காலக் குளியலுக்கு ஏற்றது வெந்நீரா? குளிர்ந்த நீரா?
பியூட்டி டிப்ஸ்: அழகுக்காக ஒரே கண்ணாடியை பல ஆண்டுகள் அணிபவரா நீங்கள்?