43th vazhuvurar music dance program

குந்தவைக்கும் நாட்டியம் கற்றுக் கொடுத்தவர் வழுவூரார்: முதல்வர் உரை!

தமிழகம்

இராஜராஜ சோழன் மகள் குந்தவைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்தவர் வழுவூரார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற 43ஆவது வழுவூரார் நாட்டியம் மற்றும் இசை விழாவில், வழுவூரார் பரதநாட்டிய அகாடமி மாணவியர்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு நாட்டிய நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது, “43 ஆவது வழுவூரார் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நினைத்து நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நாட்டிய உலகமாக இருந்தாலும் இசை உலகமாக இருந்தாலும் அதில் வழுவூரார் குடும்பத்திற்கு மகத்தான ஒரு இடம் உண்டு.

குடும்பம் குடும்பமாகத் தலைமுறை தலைமுறை என்று சொல்லுவதைப் போல, இசைக்கும் நாட்டியத்திற்குத் தொண்டாற்றிய ஒரு குடும்பமாக வழுவூரார் குடும்பம் விளங்கிக் கொண்டுள்ளது. இதுவே அரசியல் என்றால் வாரிசு அரசியல் என்று சொல்லிவிடுவார்கள். அதை விமர்சனமும் செய்து விடுவார்கள்.

இன்னும் சொல்ல வேண்டுமானால் மாமன்னன் ராஜராஜ சோழன் மகள் குந்தவைக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த பாரம்பரியம் வழுவூராருடைய பாரம்பரியம்.
மூத்த மகன் நாட்டிய கலை சாமுராக் என்று போற்றப்பட்ட சாமுராஜ், அதேபோல இளைய மகன் இசை மற்றும் திரையுலக கலைஞன் மாணிக்க விநாயகம், குறிப்பாக சாமுராஜின் வெண்கல குரலை முத்தமிழறிஞர் கலைஞர் அதிகம் விரும்பினார்கள்.

கலைஞருடைய சங்கத்தமிழ் இசை கோவையாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டவர் சாமுராஜ். இந்த துறையாக இருந்தாலும் அதில் தனி திறமைசாலிகள் நிறையப் பேர் இருப்பார்கள். எத்தனையோ விருதுகளைப் பெற்றிருப்பார்கள். சாதனைகளைத் தனிப்பட்ட முறையிலும் செய்திருப்பார்கள்.

ஆனால் அந்த துறைக்குத் தன்னைப் போலவே திறமைசாலிகளை உருவாக்கியிருப்பார்களா என்றால், அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான் அத்தகைய ஆற்றலைப் பெற்றிருப்பார்கள். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடியவர், முக்கியமானவர் வழுவூரார் ராமையா பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

தான் மட்டும் அல்ல தன்னை போலவே ஏராளமானவர்கள் வளர வேண்டும் என்று பரந்த உள்ளத்தோடு செயல்பட்டவர். நாட்டிய பேரொளி பத்மினி, பத்மா சுப்பிரமணியம், வைஜெயந்தி மாலா என இவர் உருவாக்கிய கலைஞர்களும் மாபெரும் கலைஞர்களாக நாட்டிலே வலம் வந்தவர்கள்.

இப்படி கலைஞர்களை உருவாக்கக்கூடிய பரந்த உள்ளமானது அனைவருக்கும் வந்தாக வேண்டும். இதில் வழுவூரார் குடும்பத்திற்குத் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வேண்டும் என்று தான் நானும் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

ஏனென்றால் என்னுடைய மகள் செந்தாமரை வழுவூரார் சாமுராஜிடம் நாட்டியம் கற்றுக் கொண்டார் என்பதில் எனக்குப் பெருமை. 7 வயதில் இருந்தே செந்தாமரை நாட்டியம் கற்று வந்தார். தன்னுடைய 9 வயதில் சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலியில் நடனம் ஆடியிருக்கிறார்.

14.8.1996 அன்று மியூசிக் அகாடமி ஹாலில் செந்தாமரையின் நாட்டிய அரங்கேற்றமும் நடைபெற்றது. மறைந்த தலைவர் மூப்பனார் தலைமையில், இசைஞானி இளையராஜா முன்னிலையில் அந்த விழா நடந்ததை நான் இன்றைக்கும் நினைத்துப் பார்க்கிறேன்.

அன்று செந்தாமரை சிறப்பாக நாட்டியம் ஆடினார் என்று சொன்னால், அவரை மிகச் சிறப்பாகப் பயிற்றுவித்த ஆசிரியர் சாமுராஜ் என்பது தான் உண்மை. தான் என்ன எதிர்பார்க்கிறாரோ, அதனை மாணவர்களிடம் கொண்டு வரக்கூடிய ஆற்றலைப் பெற்றவராக விளங்கினார்.

பழைய பாடல்களை வைத்தே நாட்டியங்களை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய காலத்தில் தமிழ் இலக்கியப் பாடல்களைப் புகுத்தி அதற்கென நாட்டிய அசைவுகளை உருவாக்கி தமிழ் தொண்டாற்றியவர் வழுவூரார்.

நாட்டிய மேடைகளைத் தாண்டி திரைத்துறையிலும் முத்திரை பதித்தார். மீரா திரைப்படத்தில் இடம்பெற்ற நடன காட்சிகள் அவர் வடிவமைத்தது தான். இவர் வாங்காத விருதுகளே இல்லை என்ற அளவிற்கு விருதுகளைப் பெற்றார். இசை பேரறிஞர் விருது, கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட அனைத்து விருதுகளையும் பெற்றுள்ளார்.

நாட்டிய கலையை வளர்க்க வேண்டும். இதனை அரசோ மற்றும் இது போன்ற அமைப்புகளோ மட்டுமில்லாமல் தனி மனிதர்களும் வளர்த்தாக வேண்டும்.

வழுவூரார் கலையின் தரம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால் கலைஞர்களும் ரசிகர்களும் கலையின் பெருமையையும் கலையின் நுணுக்கங்களையும் ஓரளவிற்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

கலைஞர்களாக உள்ளவர்கள் புத்தகங்களைப் படிப்பதாலும், கலை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் மாத்திரம் கலைஞர்கள் ஆகிவிட முடியாது. அநேக வருடங்கள் நல்ல குருகுல வாசம் செய்து தான் அதை கற்றுக் கொள்ள முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

அந்த அடிப்படையில் கலை ஆர்வம் உள்ளவர்கள், கலை திறமையுடைய நல்ல ஆசிரியர்களிடம் இக்கலைகளைக் கற்றுக் கொண்டு காலமெல்லாம் கலைகளை வளர்க்கத் துணைபுரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழை வளர்க்கும் ஆட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கலைகள் என்பவை தமிழ் பண்பாட்டினை காலம் காலமாக வளர்க்கும் பணிகளைச் செய்து வருகின்றன.

தமிழும், தமிழ்நாடும் பல்லாயிரம் ஆண்டுக்காலம் நின்று நிலைக்க இத்தகைய கலை இலக்கியம் தான் அடிப்படையான காரணம். எத்தனையோ படையெடுப்புகளைத் தமிழ்நாடு சந்தித்துள்ளது. அத்தனை படையெடுப்புகளையும் தாங்கி நின்று செழிக்க நமது கலை இலக்கியம் தான் காரணம்.

இந்திய விடுதலைக்காக வழுவூரார் நாட்டிய கலையை அன்றே பயன்படுத்தியது போல இன்று இருப்பவர்களும் தமிழைக் காக்கவும் தமிழ்நாட்டைக் காக்கவும் தங்களது கலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

புதிய புதிய கலைஞர்கள் உருவாகுவதைப் போல, புதிய புதிய பாடல்களும் இந்த மேடையில் ஒலிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

மோனிஷா

எமர்ஜென்சி கதவு திறந்த விவகாரம் : அண்ணாமலை விளக்கத்தால் புது குழப்பம்!

ஈரோடு கிழக்கு தொகுதி: காங்கிரஸ் போட்டி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *