வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகக் கடந்த சில தினங்களாகச் சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி தொடங்கி இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக அப்பகுதி தீவு போல் காட்சியளிக்கிறது.
சீர்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் 43.6 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. கொள்ளிடத்தில் 31 செ.மீட்டர் மழையும், செம்பனார்கோயில் பகுதியில் 24 செ.மீட்டர் மழையும், பொறையார் பகுதியில் 18 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 16 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாகச் சீர்காழி அடுத்துள்ள உப்பனாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தேனூர், கொண்டல், ஆதமங்கலம், புங்கனூர், மருதங்குடி, சீர்காழி, பணமங்கலம் சட்டநாதபுரம், தில்லைவிடங்கன், புதுத்துறை, வலுதலைக்குடி உள்ளிட்ட கிராமங்கள் உப்பனாற்றுப் பகுதியில் அமைந்துள்ளன
இந்நிலையில் இந்த ஆற்றின் கரை உடைந்ததால் சூரக்காடு பகுதியில் சுமார் 300 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
அதோடு வெளுத்து வாங்கிய கனமழையால் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
பிரியா
அடுத்த கனமழை: தேதி சொன்ன வெதர்மேன்!
கனமழை எதிரொலி: 25 மாவட்டங்களுக்கு விடுமுறை!