தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் வரும் பிப்ரவரி 7-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ள நிலையில், 4,200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 61-வது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள அவரது நினைவிடத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அஞ்சுகம் அம்மையாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக தயாராகிவிடும். பயணிகள் வசதிக்காக தாம்பரத்துக்கு 2 நிமிடத்துக்கு ஒரு முறையும், கிண்டிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு முறையும், கோயம்பேட்டுக்கு 5 நிமிடத்துக்கு ஒரு முறையும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், கிளாம்பாக்கத்தில் இருந்து தனி வாகனங்களில் செல்ல விரும்பும் பயணிகளுக்காக ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்து பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மூலம் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்” என்றார்.
மேலும், “நீண்ட தூர பயணத்துக்கு 1,666 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகளை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். இதேபோல் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு 200 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மொத்தத்தில் 4,200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: வாய் துர்நாற்றம்: நிரந்தரத் தீர்வு உண்டா?
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்!
இந்தியாவின் மீதான உக்ரைனிய – பாலஸ்தீனப் போர்களின் தாக்கம்! – பகுதி 3