திருப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 40 சதவிகித சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் தொழிலில் இருந்து வெளியேறி உள்ளன. மீதமுள்ள 60 சதவிகிதத்திலும் 30 சதவிகித நிறுவனங்களே பின்னலாடைத் தொழிலில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டீமா) தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பின்னலாடை மற்றும் அதுசார்ந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
பெரிய பின்னலாடை நிறுவனங்களிடம் இருந்தும், நேரடியாகவும் ஜாப் ஆர்டர்களைப் பெற்று சிறு, குறு, நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் நூல் விலை உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா தொற்று, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரின் தாக்கம், ஐரோப்பிய நாடுகளில் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்தது என பல்வேறு காரணங்களால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் தற்போது நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இதுபோன்ற காரணங்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 40 சதவிகித குறு,சிறு, நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் வெளியேறியுள்ளது.
இதற்கான காரணம் குறித்து பேசியுள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம்,
“திருப்பூரில் 90 சதவிகிதம் சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு பனியன் தயாரிக்க நூலில் தொடங்கி டையிங், கட்டிங் என ஒன்பது வகையான பிராஸசிங் தேவைப்படுகிறது.
வங்கதேசம், சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இந்தப் பணிகள் அனைத்தும் ஒரே கூரையின்கீழ் நடைபெறும். ஆனால், திருப்பூரைப் பொறுத்தவரை ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு நிறுவனத்தால் தனித்தனியாக செய்யப்படும்.
பின்னலாடைத் துறையில் உலக அளவில் சீனா 30 சதவிகிதமும், வங்கதேசம் 12 சதவிகிதமும், இலங்கை 4 சதவிகிதமும் ஏற்றுமதி செய்கின்றன.
இதில், இந்தியா 3.8 சதவிகித ஏற்றுமதியுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. தற்போது, நூல் விலை உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி, கொரோனா தொற்று, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரின் தாக்கம், ஐரோப்பிய நாடுகளில் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்தது என பல்வேறு காரணங்களால் திருப்பூரில் பின்னலாடை வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 40 சதவிகித சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் இத்தொழிலில் இருந்து வெளியேறி உள்ளன. மீதமுள்ள 60 சதவிகிதத்திலும் 30 சதவிகித நிறுவனங்களே பின்னலாடைத் தொழிலில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் எங்கள் அமைப்பில் 1,600 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது 650-க்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக உள்ளனர்.
பின்னலாடைத் தொழிலில் உள்ள பெருநிறுவனங்களுக்கான திட்டத்தை மட்டுமே மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடைத் தொழில் நிறுவனங்களை இரண்டு அரசுகளுமே கண்டுகொள்ளாததே இதற்கு முக்கிய காரணமாகும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடைத் தொழில் நிறுவனங்களுக்கு போதிய ஆர்டர்கள் வராததால், வங்கிகளும் எங்களை நம்பி கடன் தர முன்வருவதில்லை. வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த முடியாமல், சொத்தை விற்கும் நிலைக்கு திருப்பூரில் உள்ள சிறு, குறு, நடுத்தர பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தொழில் தேவைக்கேற்ப வங்கிகள் கட்டுப்பாடுகள் இன்றி கடன் கொடுத்தால் இந்த சரிவில் இருந்து மீண்டுவர வழியுண்டு. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்தினாலே தமிழகத்தில் 10 தொழில் நகரங்களை உருவாக்க முடியும்.
விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை உருவாக்கும் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பின்னலாடை நிறுவனங்களின் பாதிப்பு என்பது பின்னலாடைத் தொழிலும் அதைச் சார்ந்துள்ள தொழிலாளர்களிடமும் எதிரொலிக்க அதிக வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
யூடியூப் டிரெண்டிங்கில் மாமன்னன் டிரெய்லர்!
இந்தோனேஷியா ஓபன்: இறுதிப்போட்டியில் இந்திய இணை

Comments are closed.