தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரூ.20.16 லட்சம் செலவில் 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் விநியோகிக்கும் பணியை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
“தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் நீரினால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அடிப்படையில்,
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, ரூ.20.16 லட்சம் செலவில் 40 லட்சம் குளோரின் மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு குளோரின் மாத்திரைகளை விநியோகம் செய்யும் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஏரல் பேரூராட்சிப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று,
ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 குளோரின் மாத்திரைகளை பொதுமக்களிடம் வழங்கி, குளோரின் மாத்திரையை பயன்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு, குடிநீர் வழங்கக்கூடிய நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பில்லாத குடிநீரை பருகுவதால் நீரினால் பரவும் நோய்களாகிய காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை பரவ வாய்ப்புகள் உள்ளன.
இதனால் பொதுமக்கள் நன்கு கொதிக்க வைத்த குடிநீரையே பருக வேண்டும் என ஏற்கெனவே பொது சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் குளோரின் மாத்திரையைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் மட்டுமே குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
500 மில்லி கிராம் எடை கொண்ட ஒரு குளோரின் மாத்திரையில் 25 மில்லி கிராம் செயலூட்டப்பட்ட குளோரின் உள்ளது.
ஒரு குளோரின் மாத்திரை, ஒரு குடம் குடிநீர் அல்லது 20 லிட்டர் குடிநீரில் கலந்து பயன்படுத்த வேண்டும்.
குளோரின் மாத்திரை குடிநீரில் கலந்த பின்பு இரண்டு மணி நேரம் கழித்து அக்குடிநீரை பருக, சமைக்க வேண்டும்.
குளோரின் மாத்திரையை நேரடியாக பொதுமக்கள் உட்கொள்ளக்கூடாது. குளோரின் மாத்திரைகளை குழந்தைகள் கையில் கொடுக்கக் கூடாது. பெரியவர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும்.
குளோரின் மாத்திரைகள் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்புத்துறையின் களப்பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 10 குளோரின் மாத்திரைகள் வீதம் விநியோகிக்கப்படும்.
இந்த அவசரகால செயல்முறை (Emergency Public Health Response) ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குடிநீர் விநியோக முறை சரிசெய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வரை மட்டுமே பின்பற்றப்பட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் ஸ்பிரிங் ரோல்!
40 lakh chlorine tablets for affected people