பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுமி இன்று (ஜூன் 9) பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா மைத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி. இவர் அந்த கிராமத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.
அவர் கடந்த ஏப்ரல் மாதம் மைத்தான்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோர் மிரட்டியதாக கூறி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தற்கொலை செய்து கொண்ட நாகலட்சுமிக்கு 5 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அதில் 2வது பெண் குழந்தையான விஜயதர்ஷினி மற்றும் 4வது பெண் குழந்தையான சண்முகப்பிரியா இருவரும் நேற்று வீட்டின் அருகே தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் சிறுமிகளின் தந்தை கணேசன் வயல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 2 சிறுமிகளையும் புதருக்குள் இருந்து வந்த நாகப்பாம்பு கடித்ததில் சிறுமிகள் வலியால் அலறி துடித்துள்ளனர்.
சிறிது நேரத்திலேயே சிறுமிகள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதனைக் கண்ட கணேசன் உடனடியாக சிறுமிகளை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதில் சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா இன்று உயிரிழந்தார். சிறுமியின் தாயார் இறந்து 2 மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவருடைய 4 வயது மகள் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பு கடித்த மற்றொரு சிறுமி விஜயதர்ஷனி விருதுநகர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மோனிஷா
அண்ணாமலை டிராமா விரைவில் முடியும்: எஸ்.வி.சேகர் பேட்டி!
நீச்சல் பயிற்சிக்கு போய் பலியான சிறுவன்: தாயாரின் கண்ணீர்க் கேள்விகள்!