“4 ரவுண்டு சுட்டதில் 3 ரவுண்டு குண்டு பாய்ந்தது” – கோவை ஆணையர் பேட்டி
கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலையில் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தது ஏன் என்று கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்து டீக்கடையில் நின்று கொண்டிருந்த கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
கோகுல் உடன் இருந்த மனோஜ் என்பவருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தடயங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள், பொதுமக்கள் எடுத்த வீடியோ ஆகியவற்றை ஆய்வு செய்த போலீசார் குற்றவாளிகளை கண்டறிந்தனர்.
குற்றவாளிகளை பிடிக்க சிட்டி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் துணை ஆணையாளர் சந்தீஸ் தலைமையிலான 8 தனிப்படைகள் குற்றவாளிகளை பிடிக்க களமிறங்கினர்.
குற்றவாளிகள் நீலகிரி மாவட்டத்திற்கு தப்பி சென்றது தெரியவந்தது. குற்றவாளிகளில் ஒருவரின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து தொடர்ச்சியாக போலீசார் ஒவ்வொரு பகுதியாக குற்றவாளிகள் தங்கி இருந்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்ட போலீசாரின் உதவியுடன் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக ஊட்டி கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், கோத்தகிரி பகுதியை குற்றவாளிகள் கடந்து செல்வது தெரிய வந்தது.
இதனை அடுத்து கோத்தகிரி பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்த நிலையில் நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஏழு பேரை பிடித்து விசாரித்தனர்.
சந்தேகத்தின் பெயரில் ஏழு பேரையும் கோத்தகிரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் ஏழு பேரும் கோவை நீதிமன்றம் அருகே நடந்த கோகுல் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து ஏழு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வரும்போது மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி அருகே கைது செய்யப்பட்ட ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகிய இருவரும் தங்களுக்கு வாந்தி வருவதாகவும் இயற்கை உபாதை அவசரம் என வற்புறுத்தியதை தொடர்ந்து போலீசார் வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது இருவரும் அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில் போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.
சாலையிலிருந்து 100 மீட்டர் தூரம் ஓடிச் சென்றபோது அங்கே புதரில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து கௌதம் மற்றும் ஜோஸ்வா ஆகிய இருவரும் காவலர் யூசுப் என்பவரை தாக்கினர்.
அதில் காவலர் யூசுப்புக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தப்பிக்க முயன்றவர்களை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் இருவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதல் உதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த காவலர் யூசுப் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய பாலகிருஷ்ணன், காவலர் யூசுப்பை தாக்கியதோடு எஸ்ஐ எச்சரித்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாலும், தற்காப்புக்காகவும், காவலரை தாக்குவதை தடுப்பதற்காகவும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பொருட்டு இடுப்புக்கு கீழ், கால் பகுதியில் சுடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் இதுவரை கௌதம், ஜோஸ்வா, ஜோஸ்வாவின் சகோதரர் டேனியல், அருண்குமார், ஹரி என்ற கௌதம், பரணி சௌந்தர், சூர்யா ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 7 பேரும் விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
தப்பிக்க முயன்றவர்கள் மீது நான்கு ரவுண்டு சுடப்பட்டதில் மூன்று ரவுண்டு தோட்டாக்கள் அவர்கள் காலில் பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்ட பாலகிருஷ்ணன் பட்டப் பகலில் கொலை செய்தவர்கள் என்பதால் எந்த நிலைமைக்கும் செல்ல நேரிடும் எனவும், மேற்கொண்டு காவலரை தாக்காமல் இருக்க குற்றவாளிகள் சுடப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த கொலை பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கை என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு சின்னவேடம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற நபரை கோகுல் கொலை செய்திருக்கின்றான்.
இதற்கு பழி வாங்கும் பொருட்டு ஸ்ரீராமியின் நண்பர்கள் கோகுலை கொன்று பழி தீர்த்து இருக்கின்றனர்.
இதற்கு ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகிய இருவர் சதித்திட்டம் தீட்டி கொலையை அரங்கேற்றியது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கலை.ரா
“மலையேற முதலில் மலை வேண்டும்”- இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்
வீழ்ச்சியில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!